கல்வி

"புதிய கல்வி கொள்கை, புதிய இந்தியாவை உருவாக்கும் புரட்சிகர ஆவணம்”- தமிழக ஆளுநர் பேச்சு

"புதிய கல்வி கொள்கை, புதிய இந்தியாவை உருவாக்கும் புரட்சிகர ஆவணம்”- தமிழக ஆளுநர் பேச்சு

webteam

“புதிய கல்வி கொள்கை என்பது பாரதிதாசனும், பாரதியாரும் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கம் கொண்ட புரட்சிகர ஆவணமாகும்” என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, டெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம் தலைவர் (பொறுப்பு) கனகசபாபதி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த 44 இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள், 42 முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் முனைவர் பட்டம் (Ph.D) முடித்த 2139 மாணவர்கள் என மொத்தம் 2225 மாணவர்கள் பட்டம் பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் ஆளுநர் பட்டம் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “கல்வியை அனைவருக்குமானதாகவும் நவீனமாகவும் மாற்ற பிரதமர் மோடி தேசிய கல்வி கொள்கை மட்டுமல்லாமல் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் புதிய கல்வி கொள்கை என்பது பாரதிதாசனும், பாரதியாரும் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கம் கொண்ட புரட்சிகர ஆவணமாகும். இந்த புதிய இந்தியா உலகத்தை வழிநடத்தும் இந்தியாவாகும். சொல்லப்போனால் புதிய கல்வி கொள்கை, இந்திய நெறிமுறைகளில் வேறூன்றிய கல்வி முறையை உருவாக்கக்கூடியது. இது பாரதத்தை சமமான, துடிப்பான அறிவு கொண்ட சமுதாயமாக மாற்றும்.

இவையன்றி எல்லா கல்வி நிறுவனங்களும் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்து தர மக்களும் எளிதில் பெற கூடிய வகையில் உயர்தரமான கல்வியை வழங்க உறுதி எடுக்க வேண்டும். தற்போது உள்ள கல்வி முறையில் குறைபாடுகளை சரி செய்யும் நோக்கம் கொண்டது புதிய கல்வி கொள்கை” என்றார்.

தனது ஆங்கில உரையின் இறுதியில் தமிழில் பேசிய ஆளுநர் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக “பெரிசா யோசிங்க. பெரிசா கனவு காணுங்க. கஷ்டப்பட்டு வேலை செய்ங்க. தன்னமிக்கையோடு இருங்க. அப்படி செய்தால் உலகம் உங்கள் வசமாகும்” எனக்கூறி தனது உரையை முடித்தார்.

அவரைத்தொடர்ந்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “இரு மொழிக் கொள்கைக்கு ஆளுநரும் ஆதரவு தரவேண்டும்” என விழாவில் ஆளுநர் முன் கோரிக்கை வைத்தார்.

அவர் பேசுகையில், “சங்க காலத்தில் பெண் புலவர்கள் அதிக அளவு இருந்தனர். கலாச்சார படையெடுப்பிற்குப் பின், ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ எனக்கூறி பெண்களின் கல்வியை தடுத்துவிட்டனர். தற்பொழுது மீண்டும் பெண்கள் அதிக அளவில் படிக்க தொடங்கியுள்ளனர். கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் போன்றவர்கள். இன்று பட்டம் பெறுபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பதை காண்கையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் படித்து பட்டம் பெறுகின்றனர். சங்க காலம் மீண்டும் திரும்புகிறது. தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, பாரதிதாசன், பாரதியார் போன்றோர் பெயர்களின் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் அவர்கள் தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு என்ன செய்தார்கள் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்” என்றார்.

தொடர்ந்து இருமொழிக் கொள்கை குறித்து பேசுகையில், “தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் தற்போது நடைமுறையில் உள்ளது. மாணவர்கள் விருப்பப்பட்டால் மூன்றாவது மொழியை கற்று கொள்ளலாம். ஆனால் மூன்றாவது மொழியை கற்க கட்டாயப்படுத்த கூடாது. தமிழகத்தின் மாநில மொழி தமிழ் என்பதால்தான், நம் முதல்வர் அரசு தேர்வுகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி உள்ளார். ஒரு நாட்டின் வளர்ச்சி ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சார்ந்தது இத்தகைய வளர்ச்சி கல்வியால் மட்டுமே பெற முடியும். உலகளாவிய புரிதலுக்கான மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆகவே மூன்றாவது மொழியென்பது, மாணவர் விருப்பமே” என்றார்.

- பிருந்தா