கல்வி

"9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி ரத்து”- பள்ளிக்கல்வித்துறை தகவல்

"9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி ரத்து”- பள்ளிக்கல்வித்துறை தகவல்

நிவேதா ஜெகராஜா

9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் வரும் கல்வியாண்டில் நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்தை இதற்கு முந்தைய அரசு அறிமுகப்படுத்தியது. மத்திய அரசின் சமக்ர சிக்‌ஷா நிதியுதவி மூலம் கொண்டு வரப்பட்ட அப்பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு Tailoring, Beautician, Fashion Designing, Agricultural Engineering, General Mechanism உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரும் கல்வியாண்டு (2022-23) முதல், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் கிடையாது என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முடித்து, வரும் கல்வியாண்டில் 10-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் என்றும், வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் நடத்தப்படாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொழிற்கல்வி பாடம் மூடப்படுவதால் அதை நடத்தி வரும் 200-க்கும் அதிகமான தற்காலிக ஆசிரியர்கள் பணி இழப்பை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.