கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தனியார் பள்ளிகள் உறுதியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாக, கல்வி நிலையங்களில் கல்விக்கட்டணம் செலுத்துவதில் சலுகைகளை நீதிமன்றமும், அரசும் அறிவித்து வந்தன. இருப்பினும் சில கல்வி நிலையங்களில் அதிக கல்விக்கட்டணம் செலுத்த சொல்வதாகவும், செலுத்தாத மாணவர்களை அதற்காக தண்டிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அவற்றைத் தொடர்ந்து, `கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கக்கூடாது, பெற்றோரை தரக்குறைவாக பேசக்கூடாது’ என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இவற்றை தொடர்ந்து, பள்ளிகள் அதை முறையாக பின்பற்றுகின்றனவா என்பது குறித்து உறுதிமொழி சான்று தர அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தற்போது உத்தரவிட்டுள்ளது. உறுதிமொழிச் சான்றிதழ் தந்த பிறகும் அந்த பள்ளிகள் மீது ஏதும் புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.