Digital Education Digital Education
கல்வி

பள்ளிகளின் குடிநீர், கழிவறை வசதிகளில் தமிழ்நாடு எப்படி? - UDISE+ ஆய்வறிக்கை பகுதி-3

பள்ளிகளின் குடிநீர், கழிவறை வசதிகளில் தமிழ்நாடு எப்படி? - UDISE+ ஆய்வறிக்கை பகுதி-3

Madhalai Aron

மாணவ, மாணவிகளின் சேர்க்கையை பொறுத்தவரை, பள்ளியில் கிடைக்கும் வசதிகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. ஒவ்வொரு பள்ளியும் தமது பகுதியிலுள்ள இன்னொரு பள்ளிகளைப் போட்டியாக நினைத்து, அவர்களைவிட இந்த விஷயத்தில் நாங்கள் அதிக வசதிகள் கொண்டுள்ளோம் என முன்னிறுத்துவதே இதற்கு சாட்சி. அந்த குறிப்பிட்ட வசதி நவீன பயோ-டாய்லெட் தொடங்கி ஸ்மார்ட் க்ளாஸ்ரூம் வரை வேறு எது வேண்டுமானாலும் இருக்கலாம். 'எங்களிடம் இந்த வசதி அதிகமாக உள்ளது’ என சொல்லும்போது, அவர்களுக்கு கூடுதல் அட்மிஷன்கள் நடக்கிறது. 'அதிக வசதிகள் இருக்கும் பள்ளியில், தரமான கல்வி கிடைக்கும்' என்ற பொதுமக்களின் எண்ணம், இதன் பின்னான உளவியலில் முக்கிய காரணமாக இருக்கிறது. இன்றளவும் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்முன்பு அதன் கட்டமைப்பு வசதிகளை ஆராய்கின்றனர் பெற்றோர். தனியார் பள்ளிகளிலேயே பல வசதிகள் கிடைக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. இதை நாங்கள் உறுதியாக சொல்ல, சில தரவுகளே எங்களுக்கு காரணமாக அமைகின்றது.

மத்திய அரசின் 'கல்வி ப்ளஸ் ஒருங்கிணைந்த தகவல் முறை' (UDISE+) 2019-20' ஆய்வறிக்கையின்படி, ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லாத நிலை இருப்பது தெரியவந்துள்ளது. தனியார் பள்ளிகளிலும் கூட இந்த நிலை இருந்தாலும், ஒப்பீட்டளவில் பெரும்பாலான தரவுகளில், அரசு பள்ளிகளைவிட அது மேம்பட்ட சில அடிப்படை வசதிகளை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. சில வசதிகளில், அரசுப் பள்ளிகளே முன்னிலையில் உள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை. இதுபற்றிய விரிவான தகவல்களை, இந்தத் தரவுக் கட்டுரையின் வழியாக நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

முதல் விஷயம், அடிப்படைத் தேவையான குடிநீர். இந்தத் தேவை, அரசுப் பள்ளிகளில்தான் அதிகளவு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள பள்ளிகளில், 14 லட்சம் பள்ளிகளில் குடிநீர் வசதிகள் கிடைக்கிறது. அதில் அரசுப் பள்ளிகளில் 10 லட்சமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 81 ஆயிரமும், தனியார் பள்ளிகளில் 3 லட்சமும், இதர பள்ளிகளில் 49 ஆயிரம் பள்ளிகளில் மட்டுமே குடிநீர் வசதிகள் உள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரை தமிழ்நாடு, சண்டிகர், டெல்லி, கோவா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் அனைத்திலுமே 100% குடிநீர் வசதிகள் இருக்கின்றன. இதுவே 11.7 லட்சம் மாணவ, மாணவிகளைக் கொண்டுள்ள மேகாலய மாநிலத்தில் வெறும் 42.14 சதவிகித பள்ளிகளில் மட்டுமே குடிநீர் வசதிகள் உள்ளது. இங்குள்ள 14,730 பள்ளிகளில் சுமார் 57.86 சதவிகித பள்ளிகளில் குடிநீர் வசதிகள் இல்லை என்பது வேதனையான தகவல்.

பாதுகாப்பற்ற கிணறுகளிலிருந்து குடிநீர்: இந்தியாவில் மொத்தமாக 42,980 பள்ளிகளில் குடிநீர் வசதி 'இல்லாத' நிலை உள்ளது. சதவிகித அடிப்படையில் இதை பார்க்கும்போது, சுமார் 6.33% பள்ளிகளில் முறையான குடிநீர் வசதிகள் இல்லை.

இந்தியாவில் உள்ள பள்ளிகளைப் பொறுத்தவரை குடிநீர் குழாய்கள், பாக்கெட் குடிநீர், அடிபம்புகள், கிணறுகள், பாதுகாப்பற்ற கிணறுகள், மற்றும் பிற ஆதாரங்கள் மூலமாக பள்ளி வளாகத்திற்கு குடிநீர் கிடைக்கிறது. இதில், அனைத்து ஆதாரங்களின் மூலமாக, 14,64,728 பள்ளிகளுக்கு குடிநீர் கிடைக்கிறது. இதில் பார்க்க வேண்டியது என்னவென்றால் சுமார் 29 மாநிலங்களுக்கு பாதுகாப்பற்ற கிணறுகளின் மூலமாகத்தான் குடிநீர் கிடைக்கிறது. அதிலும் அசாம், மேற்கு வங்கம், மேகாலயா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜம்மு - காஷ்மீர் போன்ற மாநிலங்களில் 300-க்கும் அதிகமான பள்ளிகள் பாதுகாப்பற்ற கிணறு மூலம் கிடைக்கும் குடிநீர் ஆதாரங்களையே நம்பியுள்ளன.

தமிழ்நாட்டிலும், சுமார் 6 பள்ளிகள் பாதுகாப்பற்ற கிணறு மூலம் கிடைக்கும் குடிநீரையே நம்பியுள்ளன. அதில் 5 பள்ளிகள் அரசுப் பள்ளியையும், ஒரு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியையும் சேர்ந்தவை. இதுவே குடிநீர் குழாய் மூலம் 56,377 பள்ளிகளும், பாக்கெட் குடிநீர் மூலம் 578 பள்ளிகளும், அடிபம்புகள் மூலம் 517 பள்ளிகளும், கிணறு மூலம் 285 பள்ளிகளும், பிற ஆதாரங்கள் மூலம் 1,134 பள்ளிகளும் தங்களின் குடிநீர் தேவையை தமிழ்நாட்டில் பூர்த்தி செய்துக் கொள்கின்றன.

 28,418 பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை

இந்த நிலை ஒருபுறம் இருக்க, மறுபுறம் கழிவறை வசதிகள் இல்லாமல் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறை அரசாணை நிலை எண் படி, 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிவறையும், 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிவறையும் இருக்க வேண்டும். இந்தியாவில் சுமார் 28,418 பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை. அதிலும், மேகாலயா மாநிலத்தில் மட்டும் 15.89 சதவிகித (2,340 பள்ளிகள்) பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லாமல் இருப்பது நாம் பேசிக்கொண்டிருக்கும் 'கல்வி ப்ளஸ் ஒருங்கிணைந்த தகவல் முறை' (UDISE+) 2019-20' ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

 இந்திய அளவில் சுமார் 1.54 சதவிகித தனியார் பள்ளிகளிலும், அதாவது 5,181 பள்ளிகளில் மாணவ / மாணவிகளுக்கு கழிவறை வசதி இல்லாதது வேதனைக்குறிய விஷயம். ஆறுதலளிக்கும் வகையில், தமிழ்நாடு, சண்டிகர், டெல்லி, கோவா, புதுச்சேரி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் 100 சதவிகிதம் கழிவறை வசதி உள்ளது.

 2012-13-ம் ஆண்டு கணக்கின்படி, இந்தியாவில் இருபாலர் பள்ளிகளில் 67.8 சதவிகிதமாக இருந்த ஆண்களுக்கான கழிவறை வசதியானது 2019-20-ம் ஆண்டில் 95.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இருந்தாலும், 4.17 சதவிகித பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை. ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 98.19 சதவிகித பள்ளிகளில் மட்டுமே ஆண்களுக்கான கழிவறை வசதிகள் உள்ளன.

அதேபோல், இந்தியாவில் 2012-13-ல் 88.7 சதவிகிதமான இருந்த பெண்களுக்கான கழிவறை வசதி 2019-20-ல் 96.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கான கழிவறை வசதிகளை எடுத்துக் கொண்டால், 99.62 சதவிகித பள்ளிகளில் உள்ளன. பஞ்சாப், புதுச்சேரி, கோவா, டெல்லி, சண்டிகர் மாநிலங்களில் மட்டுமே பெண்களுக்கு 100 சதவிகித கழிவறை வசதிகள் உள்ளன.

இந்தியாவில், தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்களிலிருக்கும் பொதுவான விமர்சனங்கள் என்னவென்றால், கழிவறை வசதிகள் இருந்தாலும், அதனைப் பயன்படுத்தும் வகையில் சுத்தமாக இருப்பதில்லை என்பதே. அடிப்படை வசதிகளை ஏற்படுத்த போதுமான அளவு நிதி ஆதாரம் இல்லை என்பதே தற்போது வரை கொடுக்கப்படும் பதிலாகும். முறையான பராமரிப்பு இல்லாததால் பல பள்ளிகளில் கழிவறைகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. உதாரணத்துக்கு, சில பள்ளிகளில் கதவு இல்லாமல் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை வசதியும் எங்கும் இருப்பதாக தெரியவில்லை.

 அவதியுறும் சிறப்புக் குழந்தைகள்

 கழிவறை வசதி இல்லாத சூழலில் ஒரு மாணவனோ, மாணவியோ சிந்தனை ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்னைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக, கல்வி இடைநிற்றலுக்கு உள்ளாகும் 94 சதவிகித பெண்கள் இதனாலேயே மேல்நிலைப் பள்ளி படிப்பை நிறுத்திவிடுவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

 சிறப்புக் குழந்தைகளுக்கான கழிவறை வசதி கொண்ட பள்ளிகளில் இந்திய அளவில் வெறும் 21.65 சதவிகித பள்ளிகளில் மட்டுமே கழிவறை வசதி உள்ளது. அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை 20.89 சதவிகிதம் மட்டுமே உள்ளன.

 இந்தியாவில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 22.4 லட்சம் சிறப்பு குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்கள் படிக்கும் 78.35 சதவிகித பள்ளிகளில் முறையான கழிவறை வசதிகள் இல்லை. அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசுப் பள்ளிகளில் 79.11 சதவிகித அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை என்பது இந்த ஆய்வறிக்கையின் மூலம் நமக்கு தெரியவருகிறது. தமிழ்நாட்டில் படிக்கும் 1.64 லட்ச மாற்றுத்திறனாளி குழந்தைகளில் 27.27 சதவிகிதப் பேருக்கு மட்டுமே கழிவறை வசதிகள் மட்டுமே இருக்கின்றன.

கழிவறை வசதியை தவிர்த்தும்கூட, பொதுவாகவே சிறப்புக் குழந்தைகளை சில விஷயங்களில் கூடுதலாக கவனிக்க வேண்டியது மிகவும் அவசியப்படுகிறது.

உதாரணத்துக்கு படிக்கட்டுகளில் சிறப்பு குழந்தைகளுக்காக கைப்பிடிக்கும் கம்புகள் (Handrails) மற்றும் வளைவுகளை (Ramps) அமைப்பது, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால், இந்தியாவில், 43.73 சதவிகித பள்ளிகளில் மட்டுமே இந்த வசதிகள் உள்ளன. 56.27 சதவிகித பள்ளிகளில் இவர்களுக்கான வசதிகள் இல்லை என்பது வேதனையான ஒன்று. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 28.12 சதவிகித பள்ளிகளில் மட்டுமே சிறப்பு குழந்தைகளுக்காக படிக்கட்டுகளில் கைபிடிக்கும் கம்புகள் (Handrails) மற்றும் வளைவுகள் (Ramps) உள்ளன.

 அடுத்தபடியான பிரச்னையாக இருப்பது, கை கழுவும் வசதி. கொரோனா நேரத்தில் இதுசார்ந்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்படுத்தப்பட்டது. அதன்மூலமே, இதன் தேவையை நாம் அறியலாம். அதனாலேயோ என்னவோ இந்தியாவில் 2012-13-ம் ஆண்டு 36.3 சதவிகித பள்ளிகளில் மட்டுமே கைகழுவும் வசதி இருந்த நிலையில், 2019-20-ம் ஆண்டுகளில் 90.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பள்ளிகளில் உள்ள கைகழுவும் வசதிகளைப் பொறுத்தவரை, தமிழ்நாடு, சண்டிகர், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மட்டுமே 100 சதவிகிதத்தை அடைந்துள்ளன. இந்தியாவில் மிகவும் மோசமாக அதாவது, 50 சதவிகிதத்துக்கும் குறைவாக மேகாலயா (31.3%), நாகாலாந்து (48.11%) ஆகிய மாநிலங்கள் கைகழுவும் வசதிகளை கொண்டுள்ளன.

இந்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குடிநீர் வசதி, குடிநீருக்கான முக்கிய ஆதாரங்கள், ஆண்கள் - பெண்கள் கழிவறை வசதி, கைகழுவும் வசதி, மருத்துவ பரிசோதனை நடத்திய பள்ளிகள், சிறப்பு குழந்தைகளுக்கான படிகட்டுகளில் கைபிடிக்கும் கம்புகள் (handrails) மற்றும் வளைவுகளை (ramps) கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை போன்றவற்றை தெரிந்து கொண்டோம். அடுத்தக் கட்டுரையில், தமிழகம் மற்றும் இந்திய அளவில் நூலக வசதி, மின்சார வசதி, கணினி வசதி இணைய வசதி போன்றவற்றைக் குறித்து விரிவாக பார்ப்போம்.

முந்தைய கட்டுரைகள்: