கல்வி

கீழடியைப் போல பள்ளி கல்வித்துறையில் தவறு செய்யக்கூடாது: பிரின்ஸ் கஜேந்திரபாபு

கீழடியைப் போல பள்ளி கல்வித்துறையில் தவறு செய்யக்கூடாது: பிரின்ஸ் கஜேந்திரபாபு

webteam

கீழடியில் மத்திய அரசு செய்த தவறை பள்ளிக் கல்வித்துறையில் தமிழ்நாடு அரசு செய்யக் கூடாது என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளிட்டுள்ள அவர், “பள்ளி கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் பொறுப்பேற்றவுடன் கல்வி கற்றல் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிக முக்கியமாக, தமிழ்நாடு மாநிலக் கல்வித்திட்டம் (Curriculum), பாடத்திட்டம் (Syllabus), பாடநூல் (Textbook) எழுதும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. 21 ஆம் நுற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கிட மாநில பாடத்திட்டத்தினை மேம்படுத்திட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் சூழலில், இத்தகைய மாற்றங்கள் மாணவர்களை அரசுப் பள்ளியை நோக்கி ஈர்க்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பயத்தில், வணிக நோக்கில் செயல்படும் சில பள்ளி நிர்வாகங்களும், சுயநலக்கூட்டமும் ஒரு சிறந்த அதிகாரியை அப்பணியில் இருந்து மாற்றிட துடிக்கின்றனர். இவர்களின் தூண்டுதலின் பெயரில் தமிழ்நாடு அரசு உதயசந்திரனை பணிமாற்றம் செய்தால் அத்தகைய நடவடிக்கை நடந்து வரும் மாற்றங்களுக்கு பெரும் இடையூராக அமையும்” என்று கூறினார்.

மேலும், “தமிழ்நாடு அரசின் பாடத்திட்ட மேம்பாட்டு நடவடிக்கையை சீர்குலைக்கும் முயற்சியாகவே அதை கருதவேண்டும். கீழடியில் மத்திய அரசு செய்த தவறை பள்ளிக் கல்வித் துறையில் தமிழ் நாடு அரசு செய்யக் கூடாது என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேட்டுக்கொள்கிறது” என்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளார்.