கல்வி

தமிழகத்தில் தள்ளிப்போகிறதா பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு?

தமிழகத்தில் தள்ளிப்போகிறதா பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு?

நிவேதா ஜெகராஜா

நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தள்ளிப்போகக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 16ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வின் முடிவுகள் வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளுக்கு முன் பொறியியல் கலந்தாய்வை நடத்தினால் பல மாணவர்கள், நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின் கல்லூரிகளில் இருந்து வெளியேறக்கூடும் என்ற கணிப்பில், நீட் தேர்வு முடிவுகள் வெளியானபின் பொறியியல் படிப்புகளுக்கான புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது.

முன்னதாக கடந்த 4-ம் தேதி, பொறியியல் கலந்தாய்வில் புதிய நடைமுறையை கொண்டு வரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னணியிலும் `கலந்தாய்வு நடைமுறையில் பொறியியல் படிப்பை தேர்வு செய்து விட்டு சில மாணவர்கள் சேர்வதில்லை. இதனால் அவர்கள் தேர்வு செய்யும் அந்த இடம் காலியாகவே விடப்படுகிறது’ என்பதே காரணமாக சொல்லப்பட்டது.

4-ம் தேதி அரசு அறிவித்த மாற்றங்களின்படி, ஒரு மாணவர் ஒரு கல்லூரியை தேர்வு செய்து 7 நாட்களுக்குள் அந்த மாணவர் அவர் தேர்ந்தெடுத்த கல்லூரியில் சேர்ந்து விட்டாரா என்பதை சரிபார்த்து, அதை அக்கல்லூரி தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அலுவலகத்துக்கு தகவலாக தெரிவிக்க வேண்டும். ஒருவேளை மாணவர் அந்தக் கல்லூரியை தேர்வு செய்து விட்டு அங்கு முறையாக சேரவில்லை என்றால், மீண்டும் அக்கல்லூரிக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். அதில் இடஒதுக்கீடு அடிப்படையில் மீண்டும் கலந்தாய்வு செய்யப்பட்டு, அந்தக் காலி இடம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு முதல் ரெஜிஸ்ட்ரேஷன் பீஸ் ரூபாய் 5000 கட்டாமல் நேரடியாக கல்லூரிக்கு சென்று அரசாங்கம் நிர்ணயத்துள்ள கட்டணத்தை செலுத்தி அவர்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளலாம் என்ற மாற்றமும் கல்லூரி சேர்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.