கல்வி

ப்ளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியானது

ப்ளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியானது

webteam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்புக்கு முதன்முறையாக பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 8,63,668 மாணவர்கள் எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் தேர்வெழுதிய மாணவர்களில் 91.3 % மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.6% ஆகும். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.4% ஆகும். மாணவர்களை விட மாணவிகளே கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தாலும் 12ஆம் வகுப்பு படிக்கலாம். மாநில அளவில் 97.3 சதவிகித தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும் கோவை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. 2 ஆயிரத்து 54 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 83.9% ஆக உள்ளது.

600க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 36,380 ஆகும். இதில் 25 ஆயிரத்து 412 மாணவிகள் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 10 ஆயிரத்து 968 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மொத்த மாணவர்களில் 4.29 சதவிகிதம் பேர் மட்டுமே 500க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும் தேர்வு முடிவுகளை அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும் ஜூன் 4ஆம் தேதி பிற்பகல் முதல் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.