தமிழ்  File Image
கல்வி

‘தமிழகத்தில் இனி CBSE உள்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டாயம்!’ சட்டத்தின் முழு விவரம்

இதன் மூலம் தமிழ்நாட்டில் எந்த ஒரு வகையான பள்ளியில் சேர்ந்தாலும் அங்கு மாணவர்களுக்கு தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் பாடம் கற்பிக்கப்படும்.

PT WEB

தமிழகத்தில் உள்ள CBSE உள்பட அனைத்து வகையான பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்கள் தமிழ் பாடத்தை கட்டாயம் கற்க வேண்டும்.

ஆக இனி தமிழ்நாட்டில் எந்த ஒரு வகையான பள்ளியில் சேர்ந்தாலும் அங்கு மாணவர்களுக்கு தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் பாடம் கற்பிக்கப்படும். குறிப்பாக தமிழ் மொழியை கற்காமல் பிற மாநில மொழிகள் அல்லது பிற நாட்டு மொழிகளை மாணவர்கள் கற்கும் வேளையில் தமிழ் மொழியை கற்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தேவையான தமிழ் ஆசிரியர்களை நியமித்து முறையாக மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Students

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அடிப்படையில் மூன்று வகையான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ் மொழிப்பாடமும் இடம் பெற்றுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் மாநில பாடத்திட்டத்திற்கு உட்பட்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மட்டும் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்திற்கு உட்படாமல் CBSE, ICSE போன்ற பிற பள்ளிகள் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் படி செயல்பட்டு வருகின்றன. வெளி நாட்டு பாடத்திட்டங்கள் கூட இடம் பெறுகின்றன. இதனையும் மாணவர்கள் விரும்பி படிக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொருத்த வரையில் மொத்தம் 12 ,000 தனியார் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 20,000 பள்ளிகள் வரை மாநில பாடத்துக்கு உட்படாத மற்ற பாடத்திட்டத்தில் நடத்தப்படும் பள்ளிகள். அங்கு தமிழ் மொழி மற்ற மொழி படங்களைப் போல் விருப்ப பாடமாக தேவைப்பட்டால் எடுத்து படிக்கலாம் என்ற வகையில் வைக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் பெரும்பாலும் தமிழ் மொழியை விடுத்து மற்ற மொழி பாடங்களை எடுத்து படிக்கிறார்கள். அப்படி படிப்பதால் தமிழ் மொழியை கற்காலமலே பள்ளி படிப்பை முடிக்கும் சூழல் இருந்து வந்தது.

students

இந்த நிலையில் தான் தமிழ் பாடத்தை மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 2006 ஆம் ஆண்டு கட்டாய மொழி பாடமாக்கப்பட்டது. இதன்படி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் தமிழ் பாடத்தை கட்டாயம் படித்து தேர்வு எழுத வேண்டும். இதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள மாநில பாடத்திட்டம் அல்லாமல் வேறு பாடத்திட்டத்தில் கற்பிக்கும் எந்த ஒரு பள்ளியும் அங்குள்ள மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கற்பிக்க வேண்டும் என்ற சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட்டது. இது, படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

CBSE, ICSE உள்ளிட்ட சர்வதேச பள்ளிகள், அகில இந்திய அளவில் உள்ள பள்ளிகள் உள்பட எந்த பாடத்திட்டம் கற்பிக்கும் பள்ளியாக இருந்தாலும் அங்குள்ள மாணவர்களுக்கு தமிழ் மொழியை கற்றுத் தர வேண்டும். குறிப்பாக அந்த மாணவர்கள் தமிழை எழுதவும், படிக்கவும் தெரிந்து கொள்ளவும், பேச தெரிந்து கொள்ள வேண்டும் என்று கொண்டு வரப்பட்டது.

Students

இந்த வகையில் CBSE போன்ற பிற பள்ளிகளில் 2015-16 ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், 2016-17 ஆம் கல்வி ஆண்டில் இரண்டு வகுப்பு மாணவர்களுக்கும் என்று கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 8 ஆம் வகுப்பு வரையில் இந்த தமிழ் பாடம் கட்டாயமாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வரும் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமாக கற்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து 2024-25 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டாய தமிழ் பாட சட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும். மாணவர்கள் தமிழை கற்க வேண்டும் என்பது அடிப்படையாகும். அந்த வகையில் அடுத்த ஆண்டு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து வகுப்புகளிலும் உள்ள மாணவர்களுக்கு தமிழ் பாடம் கற்பிக்கப்பட உள்ளது.

தற்போது வரையில் தமிழ்நாடு அரசு பாடத்தில் உள்ள தமிழ் புத்தகமே CBSE, ICSE பள்ளி மாணவர்களுக்கு கட்டாய தமிழ் பாடத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி கட்டாய பாடமாக படிக்கும் போது அந்த மாணவர்கள் முழு பாட புத்தகத்தையும் படிக்க வேண்டியது தேவையில்லை. குறிப்பிட்ட பகுதி மட்டும் படிக்கும் வகையில் அந்த புத்தகத்தில் இருந்து குறைந்த அளவு பாட பகுதி படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

இப்படி மாநில பாடத்திட்டத்திற்கு உட்படாத பள்ளிகளில் தமிழ் பாடத்தை தகுந்த தமிழ் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு நடத்த வேண்டும். இந்த ஆண்டு 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அடுத்த ஆண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தமிழ் கட்டாய பாடமாக சொல்லித்தர வேண்டும்.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

கட்டியாம்பந்தல் தொடக்கப்பள்ளி - School Students

தமிழ்நாட்டில் செயல்படும் எந்த ஒரு பள்ளியாக இருந்தாலும் இந்த தமிழ் பாடத்தை கற்பிக்க வேண்டும். அடுத்த ஆண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கட்டாய பாடமாக வந்தாலும் அது பொதுத் தேர்வு மதிப்பெணில் கணக்கிடப்படாது‌. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கட்டாய தேர்வு எழுதியதற்கு தனியாக சான்றிதழ் வழங்கப்படும். இது அவர்கள் வழக்கமாக படிக்கும் கல்வி பாட திட்டத்தில் வரும் பொதுத் தேர்வு மதிப்பெண்ணில் சேர்க்கப்படாது. அதேபோன்று வரும் கல்வி ஆண்டில் தற்பொழுது மாநில பாடத்திட்டத்தில் உள்ள தமிழ் பாட புத்தகத்திற்கு பதிலாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாய தமிழ் பாடத்திற்கு என்று தனியாக தமிழ் புத்தகங்கள் தயார் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் எந்த பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் படித்தாலும் தமிழ் கட்டாய பாடம் என்பதால் வெளி நாட்டில் இருந்து வந்து படித்தாலும், வெளி மாநிலத்தில் இருந்து வந்து படித்தாலும் தமிழ் பாடத்தை படித்தாக வேண்டும். குறிப்பாக மொழி சிறுபான்மையினராக இருந்தாலும் கூட இந்த கட்டாய தமிழ் பாடத்தை கற்றே ஆக வேண்டும். ஏனெனில் இது பொது தேர்வு மதிப்பெண்ணில் கணக்கிடப்படாது‌. மாணவர் தமிழை கற்க வேண்டும் என்ற அளவிலேயே தேர்வும் அமையப்பெறும்‌.

தமிழ்நாட்டில் நடக்கும் போட்டித் தேர்வுகளில் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் இருந்து வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டில் படிக்கும் எந்த ஒரு மாணவரும் தமிழ் மொழியை கட்டாயம் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இருந்தாலும் இதனை முழுமையாக கண்காணித்து அனைத்து மாணவர்களும் தமிழ் மொழியினை கற்பதை உறுதிபடுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.