தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கு துணைத் தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் டூ தனித்தேர்வர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் துணைத்தேர்வுகள் செப்டம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் 26 ம் தேதி வரையிலும், பிளஸ் ஒன் தேர்வுகள் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7ம் தேதி வரையிலும், பிளஸ் டூ தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் 28 ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
துணைத்தேர்வு நடத்த அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு, தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில்,
மாணவர்கள் உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். சிறிய அறையாக இருந்தால் பத்து மாணவர்கள் வீதம் அமரவைக்கப்பட வேண்டும்.
400 சதுர அடி அறையாக இருந்தால், 20 மாணவர்கள் வீதம் அமரவைக்கலாம். கொரோனா காரணமாத தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு தனி அறைகள் கொடுக்கப்படவேண்டும். தேர்வுக்கான அனுமதிச்சீட்டுகள் அனைத்தும் இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்ய மாணவர்களிடம் அறிவுறுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.