கல்வி

பள்ளிக்கு வரவேண்டும் என மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிக்கு வரவேண்டும் என மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

Veeramani

பள்ளிக்கு வர வேண்டும் என மாணவர்களை எந்த தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பள்ளிக்கு மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் மூலமாகவே முகக்கவசம் வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிதி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் சுமார் மூன்று லட்சம் பேர் தமிழகத்தில் உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் அவர்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருவதாக பள்ளி கல்வித்துறைக்கு தொடர்ந்து தகவல் வருகிறது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் அவர்களின் ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

அரசுப்பள்ளிகளில் பொதுவாக தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் அதிக ஆசிரியர்களும், வட மாவட்ட பள்ளிகளில் குறைவான ஆசிரியர்களும் உள்ளனர். எனவே வட மாவட்டங்களில் பணியாற்ற தென்மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே பணி நிரவல் கலந்தாய்வின் போது இவற்றை சரி செய்யக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்