Dept of school education pt desk
கல்வி

“இது யாருக்கான அரசு என்ற கேள்வி எழுகிறது”- ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித் துறைக்கு கீழ் கொண்டு வருவதை எதிர்த்து ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

webteam

ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள் நல கூட்டமைப்பு சார்பாக, “ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு சேர்க்கும் தமிழக அரசின் முடிவை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பாக 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டின் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பள்ளிகள், இந்து சமய அறநிலையத் துறை, வனத்துறை என அரசின் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கிவந்த பள்ளிகள் அனைத்தும் இனி பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் எனவும், பள்ளிக்கல்வித் துறைக்கு 40,299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

ஆதிதிராவிடர் நல பள்ளி

இந்த அறிவிப்பில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டு சேர்க்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் முதல்வன்,

“ஆதிதிராவிட பழங்குடியின மக்களின் நலத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து உருவாக்கப்பட்ட பள்ளிகளை, பள்ளிகளின் சொத்துக்களை இன்று பள்ளிக்கல்வித் துறைக்கு தாரைவார்ப்பது ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்களுக்கான சொத்துக்களை எடுத்து நேரடியாக மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பதாக இருக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் என்று தனியான கட்டமைப்பு இருந்தால் தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப் படுத்துவது சாத்தியமாகாது.

ஆதிதிராவிடர் நல பள்ளி
சூழ்ச்சிகளை மேற்கொண்டு தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைச் சிக்கலின்றி நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு துணைபோகிறது தமிழ்நாடு அரசு
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் முதல்வன்

ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளை, கல்வித் துறையின் கீழ் கொண்டு வருவதன் மைய நோக்கமே அரசு உதவிபெறும் பள்ளிகளையும், நலத்துறைப் பள்ளிகளையும் அறவே ஒழித்து தேசியக் கல்விக் கொள்கை வழிகாட்டுதலின் படி தனியாரிடம் மெல்ல மெல்ல ஒட்டுமொத்தக் கல்வியையும் ஒப்படைப்பதே. இந்த சூழ்ச்சிதான் நடக்கிறது.

பள்ளிக்கல்வித் துறையுடனான இணைப்பிற்கு 'ஆதிதிராவிடர்' என்ற சொல்தான் காரணம் என்றால், அது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. அதை அரசே செய்யும்போது அது யாருக்கான அரசு என்ற கேள்வியும் எழுகிறது
- கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் முதல்வன்

பள்ளிக்கல்வித் துறையின் தரவுகளின்படி சுமார் 50 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் 30 லட்சம் மாணவர்கள் SC/ST மாணவர்கள்தான். ஆதிதிராவிடர் என்பது இழிவான சொல் என்ற கருத்தின் காரணமாக பிற பள்ளிகளுடன் ஆதிதிராவிடர் அரசுப் பள்ளிகளை இணைப்பதென்பது... மிகவும் மோசமான உதாரணமாக - உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது” என்றார்.