கல்வி

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

Rasus

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ‌இந்த தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுகள் துறை எச்சரித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ மாணவிகள் இன்று முதல் எழுதவுள்ளனர். இதில் நான்கு லட்சத்து 98 ஆயிரத்து 406 மாணவர்களும், நான்கு லட்சத்து 95 ஆயிரத்து 792 மாணவிகளும், 43 ஆயிரத்து 824 தனித்தேர்வர்களும் அடங்குவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3 ஆயிரத்து 371 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பாளையங்கோட்டை, திருச்சி, கோயமுத்தூர், புழல் மற்றும் வேலூர் ஆகிய சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 229 சிறைவாசிகள் தேர்வு எழுதவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆறு லட்சத்து 19 ஆயிரத்து 721 மாணவ மாணவிகள் தமிழ்வழியில் பயின்று தேர்வு எழுதவுள்ளனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களைப் பார்வையிடுவதற்காக சுமார் 6 ஆயிரத்து 400 பறக்கும்படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை கூறியுள்ளது.

தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்களோ ஆசிரியர்களோ அலைபேசி உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமானால் பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய பள்ளி கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தேர்வுகள் துறை இயக்குநர் கூறியுள்ளார்.