கல்வி

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும்! - சோனு சூட்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும்! - சோனு சூட்

sharpana

’கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கவேண்டும்’ என்று மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் சோனு சூட்.

கொரோனா காலத்தில் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். தனது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் என்று தனது கரங்களை நீட்டி வருகிறார். ஏற்கனவே, கொரோனா பரவலின் இரண்டாவது அலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை என அனைத்து வயதுடையவர்களும் பாதிக்கப்படுவதால் ‘பொதுத்தேர்வுகளை ரத்து செய்யவேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இலவசக் கல்வியை அளிக்க முன்வரவேண்டும். அது பள்ளிக் கல்வியாக இருந்தாலும் சரி, கல்லூரி கட்டணமாக இருந்தாலும் சரி. அரசு மற்றும் தனியார் பள்ளிக், கல்லூரியாக இருந்தாலும் முழு கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும்” என்று வீடியோவில் கோரிக்கை வைத்துள்ள அவர், ’கொரோனாவால் நேசிப்பவர்களை இழந்த ஒவ்வொருவரும் ஒன்றுசேர வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.