உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகரைச் சேர்ந்த பழைய பொருள் வாங்கி விற்கும் கடை நடத்திவரும் பிக்ஹாரி குமார் என்பவரின் மகன் அரவிந்த்குமார். வயது 26. அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் (நீட்) 9 வது முறையாக முயற்சி செய்து வென்றுள்ளார். தன் குடும்பத்தின் மீது பிறர் காட்டும் வேற்றுமையை அகற்றுவதற்காக, கிராமத்தில் இருந்து 900 கிலோ மீட்டர் தொலைவு சென்று படித்திருக்கிறார் அரவிந்த்.
இது மற்ற மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் வெற்றிக்கதையாக இருக்கிறது. பழைய பொருட்களைச் சேகரித்து அதனை நம்பி பிழைத்துவரும் தந்தையின் வாழ்க்கை நிலையை மாற்றவேண்டும் என்று நினைத்த அரவிந்த்குமார் நீட் தேர்வில் சாதித்திருக்கிறார். இதன் மூலம் அவரது மருத்துவக் கனவு நனவாகியுள்ளது.
கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்ற அரவிந்த் குமார், தற்போது மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்குத் தயாராகிவருகிறார். நீட் தேர்வில் அவர் 620 மதிப்பெண்களுடன் இந்திய அளவில் 11603 ரேங்க் பெற்றுள்ளார்.
அரவிந்த்குமாரின் தந்தை பிக்ஹாரி குமார், சைக்கிள் ரிக்சாவில் தெருக்கள்தோறும் சென்று பழைய பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்து பிழைத்துவருகிறார். அவரது தாய் லலிதா படிக்காதவர். இருவருக்கும் மகன் மருத்துவராக வேண்டும் என்பதுதான் பெருங்கனவாக இருந்தது.
கோரக்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் 8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று படித்த அரவிந்த் குமார், ஆலன் கேரியர் இன்ஸ்டிட்யூட்டில் 75 சதவீத உதவித்தொகையுடன் நீட் தேர்வுக்குப் பயிற்சிபெற்றார்.
"என் வெற்றிக்கு முழு காரணம் கோட்டா பயிற்சி மையம்தான். அங்கு செல்லவில்லை என்றால், என்னால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கமுடியாது. நான் சராசரி மாணவன்தான். பன்னிரெண்டாம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்கள்தான் பெற்றேன். நான் மருத்துவராகி என் குடும்பத்திற்கு மரியாதையைத் தேடித் தருவேன்" என்று உற்சாகமாகப் பேசுகிறார் மாணவர் அரவிந்த்குமார்.