கல்வி

தேர்வின்றி மதிப்பெண் அளிக்க பள்ளிக்கு ஒரு கமிட்டி தேவை: கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி

தேர்வின்றி மதிப்பெண் அளிக்க பள்ளிக்கு ஒரு கமிட்டி தேவை: கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி

நிவேதா ஜெகராஜா

"ஒவ்வொரு பள்ளிக்கும், சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, தேர்வின்றி மாணவர்களுக்கு மதிப்பெண் அளிக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

அந்தவகையில் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி நமக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “மாணவர்களின் நலனே முக்கியம். பரீட்சையின்றி எப்படி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படியென்றே நாம் ஆலோசிக்க வேண்டும். அந்த வழிமுறையை நிறைவேற்ற ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில், பெற்றோரையும் நியமிக்க வேண்டும். பெற்றோர் முன்னிலையில், தேர்வின்றி குழந்தைகளின் திறன் மதிப்பீடு நடக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே, முறைகேடுகள் தடுக்கவும் தவிர்க்கவும்படும்” எனக்கூறியுள்ளார்.

முன்னதாக கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மூன்றாவது அலையும் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இப்போதுதான் இரண்டாவது அலை கொஞ்சம் தனிந்துவருகிறது என்பது ஆறுதல் தந்தாலும், மூன்றாவது அலை குழந்தைகள் மத்தியில் ஏற்படும் என்ற அறிவியலாளர்கள் கருத்துகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.

இதற்கிடையில், 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக, பிரதமர் மோடி இன்று அறிவித்திருந்தார். தமிழகத்தில், இந்த தேர்வின் நிலவரம் பற்றிய ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது.

தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துரை செயலாளர் மற்றும் ஆணையர், தேர்வுத்துறை இயக்குநர் உள்ளிட்டோருடன் நடந்த  அக்கூட்டத்தின் முடிவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இன்னும் 2 தினங்களில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், அதற்கு முன்னராக பெற்றோர் – கல்வியாளரிடம் கருத்து கேட்கப்படும் என்றும் கூறப்பட்டது.இதைத்தொடர்ந்து கல்வியாளர்கள் பலரும் தங்களின் கருத்தை பதிவுசெய்து வருகின்றனர்.