கல்வி

'கெத்து' வலையில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை....! மீட்டெடுப்பது எப்படி?

'கெத்து' வலையில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை....! மீட்டெடுப்பது எப்படி?

ஜா. ஜாக்சன் சிங்

முன்னெப்போதும் இருந்திராத வகையில் தமிழகம் முழுவதிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கின்றனர் பள்ளி மாணவர்கள். கடந்த இரண்டு மாதங்களாகவே பள்ளி மாணவர்களின் அத்துமீறல்களும், அடாவடித்தனமான செயல்களும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் உலா வருவதே அவர்கள் மீது தற்போது கவனக்குவியல் விழ காரணமாக அமைந்துவிட்டது. இந்த ஊர் அந்த ஊர் என எந்த பாரபட்சமும் இன்றி சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள பள்ளி மாணவர்களின் அசாத்திய சாகசங்கள் தினந்தோறும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து மது அருந்துவது; ஆசிரியரை அடிக்க பாய்வது; கொலை மிரட்டல் விடுப்பது; ஆசிரியை பாடம் நடத்தும் போது பின்னால் இருந்து நடனமாடுவது என வீடியோக்கள் வரைமுறை இல்லாமல் குவிந்து கிடக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, திருநெல்வேலியில் ப்ளஸ் 2 மாணவனை சக பள்ளி மாணவர்களே கொலை செய்திருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மாணவர்களின் இந்த செயல்களை பார்த்து தமிழக மக்கள் உண்மையில் மிரண்டு போயிருக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது. மாணவர்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, அவர்களை எவ்வாறு திருத்துவது; அவர்களை ஒழுக்கசீலர்களாக மாற்றுவது எப்படி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் பஞ்சமில்லாமல் நடந்து வருகின்றன. இதில் பெரும்பாலானோர், "மீண்டும் ஆசிரியர்கள் கையில் பிரம்பை கொடுக்க வேண்டும்" என்றும், "மாணவர்களை கண்டிக்கும் உரிமையை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்" எனவும் தான் வலியுறுத்துகின்றனர். இந்தக் கருத்தை முற்றிலுமாக நாம் புறம்தள்ளிவிட முடியாது என்ற போதிலும், இந்த விவகாரத்தை வெவ்வேறு கோணங்களிலும் அணுக வேண்டியது அவசியம் என்றே தோன்றுகிறது. முதலில், ஒரு விஷயமோ அல்லது பிரச்னையோ திடீரென ஓரிரு மாதங்களில் பூதாகரமாகாது என்பதை அனைவரும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். பல வருடங்களுக்கு முன்பே அதற்கான விதை உருவாகியிருக்கும். பிறகு மெல்ல மெல்ல அது வேர்விட்டு ஆழமாக தடம்பதித்து, ஒருகட்டத்தில் பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கும். இன்றைக்கு நாம் காணும் மாணவர் பிரச்னையும் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக முளைவிட்டு இன்று பெரிதாகி இருக்கிறது. எனவே, இதன் அடிப்படையை ஆராயாமல் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கண்டுவிட முடியாது என்பதே நிதர்சனம்.

பிரச்னையின் தொடக்கப்புள்ளி...

பொதுவாக, மாணவர்களின் இந்த ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் தான் காரணம், பெற்றோர்கள் தான் காரணம் என தனித்தனியாக குற்றம்சாட்டி விட முடியாது. ஏனெனில் ஆசிரியர், பெற்றோர்களை தவிர இந்த சமூகம், அது கற்றுக்கொடுக்கும் கற்பிதங்கள், உலகமயமாக்கலின் தாக்கம் என அனைத்துமே இந்தப் பிரச்னைக்கு பின்னால் இருக்கின்றன. முதலில், பெற்றோரில் இருந்தே தொடங்குவோம். ஏனெனில் ஒரு குழந்தை முதன்முதலில் கற்கும் இடமே அதன் வீடு தான்.

இன்று இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடும் பதின்பருவ மாணவர்கள் அனைவருக்கும் 1970-களின் மத்தியில் அல்லது 1980-களின் முற்பகுதியில் பிறந்தவர்கள்தான் பெற்றோர்களாக இருக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட இந்த பெற்றோர், சிறு பிள்ளைகாக வளர்ந்து வரும் சமயத்தில் இந்தியாவின் பொருளாதார சூழல் மிகவும் பின்தங்கியிருந்தது.

தனிநபர் வருமானமும் மிகவும் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக, அந்தக் காலக்கட்டத்தில் பிறந்தவர்களுக்கு தங்கள் குழந்தை பருவத்திலும் சரி., வளர் இளம் பருவத்திலும் சரி., அவர்களின் நியாயமான ஆசைகள் கூட நிராசைகளாகவே மாறியிருக்கின்றன. நல்ல உணவு தொடங்கி, பொழுதுபோக்கு அம்சங்கள் வரை அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்திருக்கிறது. ஆதலால், இந்த நிராசைகளுடன் வளரும் இவர்கள், தங்களின் பிள்ளைகளை எந்தவித கஷ்டமும் தெரியாமல் வளர்க்க வேண்டும் என திருமணத்துக்கு முன்பே முடிவு செய்கிறார்கள். அந்தக் கனவை மெய்ப்பிக்கும் விதமாக, அவர்கள் கல்லூரியில் படித்து முடிக்கும் சமயத்தில், அதாவது 1990-களில் இந்தியா தாராளமய பொருளாதாரக் கொள்கையை ஏற்கிறது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைகிறது. தாராளமயமாக்கலின் விளைவாக வேலைவாய்ப்புகளும் பெருகுகின்றன. தனிநபர் வருமானமும் அதிகரிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் வேலைக்கு சேரும் மேற்குறிப்பிட்டவர்கள் நன்றாக சம்பாதிக்க தொடங்குகின்றனர். ஏற்கனவே சொன்னதுபோல, அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் 'இல்லை' என்ற வார்த்தையை மறந்தும் சொல்லிவிடக் கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே ஏற்றுக்கொள்கின்றனர். விளைவு, அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு (2k கிட்ஸ் ) கேட்டது எல்லாமே கிடைக்கிறது. அது உணவாக இருந்தாலும் சரி; பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும் சரி; எல்லாமே தாராளமயம்தான். கடன் வாங்கியாவது பிள்ளைகள் கேட்டதை வாங்கி தர வேண்டும் என்பதுதான் அவர்களின் தாரகமந்திரமாக மாறுகிறது. தாங்கள் நினைத்தது போலவே அவர்களின் குழந்தைகளும் கஷ்டம் தெரியாமலேயே வளர்ந்துவிட்டார்கள். ஆனால் அதன் விளைவை, அவர்களின் பெற்றோர் இப்போதுதான் அனுபவிக்கின்றனர். குழந்தையாக இருந்தபோது 500 ரூபாய் பொம்மையை கேட்டு அடம்பிடித்தவர்கள், இன்று பதின்ம வயதை எட்டியதும் 2 லட்ச ரூபாய் ரேஸ் பைக்கை கேட்டு பெற்றோரை மிரட்டுகின்றனர். பெற்றோர்களும் வேறு வழியின்றி அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இன்றைக்கு சாலையில் பைக் சாகசம் செய்பவர்கள், மக்கள் கூடும் இடங்களில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் அனைவருமே 'இல்லை' என்ற வார்த்தையை கேட்டிராத தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தான்.

சரி.., வீட்டில்தான் நிலைமை இப்படியாகிவிட்டது; பள்ளிகளாவது இவர்களை திருத்தி இருக்கலாமே என கேள்வி எழலாம். ஆனால், அங்கும் நிலைமை தலைகீழாக மாறிப்போனதுதான் வேடிக்கை. ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது என்ற சட்டம் அமலுக்கு வந்த பின்னர் பள்ளிச்சாலைகளுக்கு சென்றவர்கள்தான் இந்த தலைமுறையினர். இதனால் வீட்டிலும் கண்டிப்பு இல்லை; பள்ளியிலும் கண்டிப்பு இல்லை என்கிற நிலைமை உருவாகியது. அரசாங்கம் கொண்டு வந்த சட்டத்தை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட மாணவர்கள், ஆசிரியர்களையே மிரட்ட தொடங்கினார்கள். மீறி கண்டித்தால், எனது ஜாதி பெயரை கூறி திட்டிவிட்டார்; அடித்துவிட்டார் என காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் வரை மாணவர்கள் சென்றுவிட்டார்கள். இதில் பல ஆசிரியர்களின் வேலையே பறிபோயிருக்கிறது. இதனை பார்க்கும் ஆசிரியர்களின் மனநிலை வேறு மாதிரியாக மாறிவிட்டது. 'மாணவர்கள் படித்தால் என்ன... படிக்காவிட்டால் என்ன.... நமக்கு சம்பளம் வந்தால் போதும்' என்ற மனநிலைக்கு அநேக ஆசிரியர்கள் வந்துவிட்டார்கள். ஒருசமயத்தில், படிக்காமல் சேட்டை செய்து சுற்றித் திரியும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்து, தங்கள் வீடுகளுக்கு வரச் சொல்லி பாடம் கற்றுக்கொடுத்ததை கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி இருந்த ஆசிரியர் சமூகத்தை இவ்வாறு மாற்றியதன் பெரும் பங்கு அரசாங்கத்தையே சாரும். அந்தக் குறிப்பிட்ட சட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோருக்கும் இதில் கணிசமான பங்கு உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.

'கெத்து' போதை...

மூன்றாவது, நமது சமூகம். சமூகம் என்பது எங்கோ இருப்பது அல்ல. ஒரு மாணவன் காலையில் பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் வரை அவன் மீது இந்த சமூகம் தனது தாக்கத்தை செலுத்துகிறது. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில், மாணவர்கள் மீது சமூகம் ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதிலும், இன்றைய தலைமுறையினரை தவறான பாதையில் வழிநடத்துவதை நமது நவீன சமூகம் சரியாகவே செய்து வருகிறது.

பெரும்பாலான யூடியூப் சேனல்கள் முதல் திரைப்படங்கள் வரை அதைதான் மாணவர்களுக்கு போதிக்கின்றன. பெரியவர்கள் சொல் பேச்சை கேட்பது; ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது ஆகியவற்றை இன்றைய சமூகம் கேலிக்கூத்தாகவே சித்தரிக்கிறது. அறிவுரை கூறுபவர்களையும், நல்லொழுக்கத்தை போதிப்பவர்களையும் 'பூமர்' என கிண்டல் செய்ய சொல்லித் தந்து ரசிக்கிறது இந்த சமூகம். அதே சயமத்தில் அடாவடி செயல்களிலும், பெரியவர்களின் பேச்சை மதிக்காமல் நடந்து கொள்வதையும் 'கெத்து' என அது கூறுகிறது. உண்மையில், இந்த 'கெத்து' என்ற வார்த்தைதான் இன்றைய தலைமுறையினரை வெகுவாக சீரழிக்கிறது. ஆசிரியரை எதிர்த்து பேசினால் 'கெத்து' ; அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ கெட்டவார்த்தை பேசினாலே 'கெத்து' ;14 வயதுக்குள் காதலில் விழுந்து இன்ஸ்டாகிராமில் 'கமிட்டட் ஸ்டேட்டஸ்' வைத்தால் அதைவிட 'கெத்து' . இந்த கெத்துதான் இன்றைய பதின்பருவ மாணவர்களின் அன்றாட வாழ்க்கையாக மாறிவிட்டது. இது எத்தனை பெற்றோருக்கு தெரியும் என தெரியவில்லை. இவ்வாறு தவறான பாதையில் சென்று கொண்டிருந்த மாணவர்களை, இந்த கொரோனா ஊரடங்கு இன்னும் மோசமாக மாற்றிவிட்டது.

அதுவரை தங்கள் பெற்றோரின் செல்போனை அரை மணிநேரம் கடன் கேட்டு விளையாடி வந்த மாணவர்களுக்கு கொரோனா ஊரடங்கு தனித்தனி 'ஸ்மார்ட்' போன்களை பரிசளித்தது. ஆன்லைன் வகுப்புக்காக வாங்கித் தரப்பட்ட செல்போன்களை மாணவர்கள் இன்று மிக மோசமான செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அடிமையாக்கும் இணைய விளையாட்டுகளிலும், பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கும் ஆபாசப் படங்களிலும் மாணவர்கள் மூழ்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். "அனைத்து மாணவர்களுமா இப்படி இருக்கிறார்கள்" என்று கேட்டால்... நிச்சயமாக இல்லை. வீட்டில் கண்டிப்புடன் இருக்கும் மிகச்சில பெற்றோரின் பிள்ளைகள் மட்டும்தான் இதில் விதிவிலக்கு. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் இந்த புதைக்குழியில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

இவ்வாறு கொரோனா ஊரடங்கில் இரண்டு வருடங்களாக எந்தவித கடிவாளமும் இன்றி இருந்த மாணவர்களால், திடீரென பள்ளிக்குள் தற்போது அடைப்படுவதை ஏற்க முடியவில்லை. மேலும், படித்து புரிந்துகொள்ளும் திறனையும், மனப்பாடம் செய்யும் திறனையும் கூட கொரோனா ஊரடங்கு அடியோடு ஒழித்துவிட்டது. இதனால் பள்ளிப் பாடங்களை மாணவர்களால் உடனடியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இதுதான் பள்ளியில் அராஜகங்களில் ஈடுபடவும், ஆசிரியர்களுடன் மல்லுக்கட்டும் மனநிலைக்கும் மாணவர்களை தள்ளிவிட்டிருப்பதாக தேர்ந்த கல்வியாளர்கள் கூறுகின்றனர். உண்மையிலேயே மாணவர்கள்தான் இப்போது பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் தங்களின் கற்கும் திறனை இழந்திருப்பதே இத்தகைய வன்முறை செயல்களில் அவர்களை ஈடுபட வைப்பதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, இந்த சமயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுப்பது விபரீதத்திற்கே இட்டுச் செல்லும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் சொல்வதை போல, ஆசிரியர்கள் கையில் பிரம்பை கொடுப்பதோ, மாணவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதோ இந்த பிரச்னைக்கு இப்போது தீர்வாக இருக்காது. மாறாக அது பிரச்னையைதான் மேலும் பெரிதாக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சரி... அப்படியென்றால் இதற்கு தீர்வே கிடையாதா...? இருக்கிறது. முதலில், மாணவர்களுக்கு நல்ல மனநல மருத்துவர்களை கொண்டும், சிறந்த ஆசிரியர்களை கொண்டும் கவுன்சிலிங் கொடுக்கும் நடவடிக்கையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடங்க வேண்டும். இரண்டு ஆண்டு இடைவெளி என்பது மிகப்பெரியது. இந்தக் காலக்கட்டத்தில் புத்தகத்தையே திறந்து பார்க்காத மாணவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை திடீரென புத்தகத்தை எடுத்து அமர வைப்பது சிரமமான காரியம். எனவே கல்வி மீது அவர்களின் கவனத்தை ஒருங்குப்படுத்த கவுன்சிலிங் மிக அவசியம். ஆனால், இந்த கவுன்சிலிங் ஆகச்சிறந்த நிபுணர்களை கொண்டு அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்த கவுன்சிலிங் என்பது விழலுக்கு பாய்ச்சிய நீரை போல எந்தப் பயனையும் வழங்காது. இதில் கூடுதல் கவனமும், சிரத்தையும் தேவை. இரண்டாவதாக, இந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்கள் இழந்திருக்கும் கற்கும் திறனை மீட்டெடுக்க புத்தாக்க பயிற்சிகளை வழங்க வேண்டும். இவற்றை எல்லாம் செயல்படுத்திய பிறகே, மாணவர்களை கண்டிக்கும் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த பின்னர், மாணவர்களை கண்டிக்கும் உரிமையை ஆசிரியர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோருக்கும் அதிக பங்கு இருக்கிறது. அவர்களும் தங்கள் பிள்ளைகள் மீதான அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்களை இஷ்டம் போல தூங்குவதற்கும், செல்போனில் விளையாடுவதற்கும் அனுமதிக்கக் கூடாது. அதிகாலை எழுந்து படிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் முடித்துவிட்டதால் அவர்களிடம் இருந்து ஸ்மார்ட் போன்களை அப்புறப்படுத்துவது நல்லது. கவனச்சிதறலுக்கு முக்கிய காரணம் ஸ்மார்ட்போன்கள்தான். படிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு அடிக்கடி உணர்த்த வேண்டும். வெற்றியாளர்களின் பேச்சுகளை கேட்க வைக்க வேண்டும். அதேசமயத்தில், எப்போது பார்த்தாலும் படிப்பு படிப்பு என இல்லாமல், மாலை வேளைகளில் ஏதேனும் உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகளில் அவர்களை ஈடுபட வைக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே மாணவர்களின் மனநிலையை அடுத்த சில மாதங்களுக்குள் நம்மால் மாற்ற முடியும். அனைத்துக்கும் மேலாக, 'இது வெறும் மாணவர்கள் பிரச்னைதானே' என அரசாங்கம் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. மாணவர்களின் எதிர்காலம்தான் நாட்டின் எதிர்காலம் என்ற உண்மையை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஒரே ஒரு வார்த்தை. "நிலைமை கைமீறிப் போகிறது..."