182 தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமித்துக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுப்பள்ளிகளைச் சார்ந்த 182 இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சமக்ர சிக்ஷாவில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் & எண்ணும் எழுத்தும் திட்ட கட்டகங்கள் உருவாக்கும் பணி, மொழிபெயர்ப்பு பணி, மின் பாடப்பொருள் உருவாக்கும் பணி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
182 பேரும் சமக்ர சிக்ஷாவின் பல்வேறு கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் சார்ந்த பள்ளிகளில் 182 தற்காலிக ஆசிரியர்களை மாற்று ஏற்பாடாக 3 மாத காலத்துக்கு மட்டும் தொகுப்பூதியத்தில் தலைமை ஆசிரியர்களே நியமனம் செய்துகொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 என்று தொகுப்பூதியம் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சமக்ர சிக்ஷா பணிகள் முடிவடைந்து மீண்டும் தங்களுடைய பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் திரும்பும்போது, தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை எவ்வித புகாருக்கும் இடம்தராமல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், நியமனத்தை முதன்மைக்கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.