கல்வி

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அங்கன்வாடிக்கு கீழ் மாற்றம்!

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அங்கன்வாடிக்கு கீழ் மாற்றம்!

சங்கீதா

நடப்பு கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அங்கன்வாடிக்கு கீழ் மாற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஈர்க்கும் வகையில், ஆங்கிலவழிக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன. சுமார் 2,381 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், இந்த வகுப்புகளுக்காக ஏராளமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

இதற்கிடையில் கொரோனா காரணமாக இந்த வகுப்புகள் நடைபெறாமல் இருந்தநிலையில், நடப்பு கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அங்கன்வாடிக்கு கீழ் கொண்டு வரப்படும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிகளில், மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும், அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு செல்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.