கல்வி

`எங்க ஸ்கூல்ல கஜா புயல் சேதங்களை சரிசெஞ்சு கொடுங்க’-கிராம சபை கூட்டத்தில் பேசிய குழந்தைகள்

`எங்க ஸ்கூல்ல கஜா புயல் சேதங்களை சரிசெஞ்சு கொடுங்க’-கிராம சபை கூட்டத்தில் பேசிய குழந்தைகள்

webteam

புதுக்கோட்டையில் கஜா புயலின்போது சேதமான அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரிய மாணவர்கள், இறுதியில் அவர்களே களத்தில் இறங்கி நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு இதுகுறித்து மீண்டுமொருமுறை கோரிக்கை வைத்துள்ளனர் அப்பள்ளி குழந்தைகள்.

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த கஜா புயலின் போது இப்பள்ளியின் முன்புற சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் இன்னும் சரி செய்யாமல் காணப்படுகிறது. பல முறை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் சார்பாக அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

முன்புற சுற்றுச்சுவர் இடிந்ததால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே இருக்கின்றது. மேலும் பள்ளிக்கு அருகில் உள்ள பேருந்து நிழல் குடையும் இடிந்து காணப்பட்டு வருகிறது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் பள்ளி வளாகத்தில் அதிகம் உள்ளது என அனைவரும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். பள்ளியின் முன் சாலை இருப்பதால் பேருந்து மற்றும் வாகனங்கள் அடிக்கடி செல்வதால் பள்ளி குழந்தைகள் யதார்த்தமாக வெளியில் வரக்கூடிய சூழல் இருக்கின்றது. அவ்வப்போது கால்நடைகளும் உள்ளே வருவதால் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பும் இல்லை.

இதற்காக அரசிடம் பல முறை போராடியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இறுதி முயற்சியாக மாணவர்களே களத்தில் இறங்கிவிட்டனர். இதன்படி பள்ளியில் படிக்கும் குழந்தைகள் சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அங்குள்ள பெரியவர்களிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் இது தொடர்பான மனுவையும் அவர்களிடம் அளித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

மாணவர்கள் வைத்த கோரிக்கையில் கஜா புயலில் உடைந்த சுற்றுச்சுவரை சீரமிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாது பள்ளியின் பக்கவாட்டுச் சுவரை சீரமைப்பது, மழை காலங்களில் ஓட்டு கட்டிடத்தில் தண்ணீர் ஒழுகுவதால் புதிய காங்கிரிட் கட்டிடம் கட்டுவது, மழை காலத்தில் பள்ளியின் உட்புறத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பேவர்ப்ளாக் அமைத்து நடைபாதை உருவாக்குவது, பள்ளியில் மின்மீட்டர் வைத்திருக்கும் இடத்தில் தண்ணீர் கசிவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாற்றி அமைத்து தருவது உள்ளிட்ட குறைபாடுகளையும் முன்வைத்தனர்.

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு இதுகுறித்து அவர்களே பேசி, கோரிக்கை மனு அளித்தனர். மாணவர்களே கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை வைத்தது, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் பேசுபொருளானது.

- குமரேசன்