பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 32 மேல்நிலைப் பள்ளிகளும் 38 உயர்நிலைப் பள்ளிகளும் இயங்குகின்றன. கடந்த கல்வியாண்டுகளில் இவற்றில் 20க்கும் அதிகமான பள்ளிகளில் பயின்ற, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர். ஆனால், இந்த ஆண்டு சூளைமேடு சென்னை அரசு உயர்நிலைப் பள்ளி மாணாக்கர்கள் மட்டுமே 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12 ஆம் வகுப்பு முடிவுகளில், சென்னை மாநகராட்சி நடத்தும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் 86.53% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 5,642 பேர் (3,164 மாணவிகள், 2,478 மாணவர்கள் எழுதிய நிலையில் 4,882 பேர்(2,907 மாணவிகள், 1,975 மாணவர்கள்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10 ஆம் வகுப்பு முடிவுகளில், சென்னை உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 75.84% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களோடு மேயர் பிரியா புதன் அன்று ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.