பெரியார் ஈ வெ ரா கல்லூரி, திருச்சி கோப்புப்படம்
கல்வி

தன்னாட்சி அங்கீகாரத்தை புதுப்பிக்க தவறிய பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி! மாணவர்களின் நிலை என்ன?

பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியின் நிர்வாக கவனக்குறைவால் பல ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கல்லூரியின் அங்கீகாரத்தை புதுப்பிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரும் என்று மாணவர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

PT WEB

திருச்சியில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்க்கல்வி பெற வேண்டும் என்பதற்காக, தந்தை பெரியார் தன்னுடைய இறுதிகாலத்தில் தனது சொந்த நிலத்தையும், பணத்தையும் அரசுக்கு தானமாக வழங்கினார்.

பெரியார்

திருச்சி காஜாமலையில் உள்ள அந்த நிலத்தில் கடந்த 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கல்லூரி ஒன்றை அமைத்தது. அதற்கு பெரியார் ஈ.வெ.ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயரும் வைத்தது. இதனை கடந்த ஆண்டு தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என தமிழக அரசு பெயர்மாற்றம் செய்தது. பல்கலைக்கழக மானியக்குழுவும் அதை ஏற்றுக்கொண்டு கடிதம் அனுப்பியுள்ளது.

இக்கல்லூரி கடந்த 1999ஆம் ஆண்டு தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரியாக மாறியது. இந்த தன்னாட்சிக்கான அங்கீகாரத்தை கல்லூரி நிர்வாகம் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் புதுப்பிக்க தவறியதால், இங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது.

இங்குள்ள 15 துறைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரம் மாணவர்கள் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் பெற்று இக்கல்லூரியில் இருந்து வெளியேறுகிறார்கள்.

பெரியார்

தற்போது இக்கல்லூரியில் 165 பேராசிரியர்களும், 35 கௌரவ விரிவுரையாளர்களும், 25 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். இங்கு 5,006 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இங்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் என கலைத்துறை பாடப்பிரிவுகளும், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், காட்சி தகவலியல், புள்ளியியல், புவியியல், உயிர் வேதியியல், கணினி பயன்பாடு அறிவியல் என அறிவியல் பாடப்பிரிவுகளும் உள்ளன.

பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி

இக்கல்லூரியில் பயின்று வெளியேறிய பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், உயர்க்கல்வி பெற்றதில் முதல் தலைமுறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இங்கு படித்த பலர் ஆட்சி அதிகாரத்திலும், அரசு நிர்வாகத்திலும் பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியை கொடுத்து, அவர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரத்தை இக்கல்லூரி பெற்றுத்தந்துள்ளது.

இத்தகைய மகத்தான கல்லூரி தனக்கான அங்கீகாரத்தை, பல்கலைக்கழக மானிய குழுவிடம் புதுப்பிக்கத் தவறியதால், இன்று அங்கீகாரத்தை இழந்து, எவ்வித அங்கீகாரமும் இல்லாமல் இயங்கிவருகிறது.

கல்லூரியின் அங்கீகாரம் நிறைவடைவதற்கு 6 மாதத்திற்கு முன்பாகவே அங்கீகாரத்தை புதுப்பிக்க, பல்கலைக்கழக மனியக்குழுவிடம் விண்ணப்பித்திருக்க வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு கல்லூரி நிர்வாக பொறுப்புகளில் இருந்த கல்லூரி முதல்வர் சுகந்தி, தேர்வு நெறியாளர் முனைவர் வாசுதேவன், துணை தேர்வு நெறியாளர் முனைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விண்ணப்பிக்கத் தவறிவிட்டனர்.

பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

மேலும் அன்றைய காலத்தில் பொறுப்பில் இருந்த உயர்க்கல்வி துறை செயலாளரும், கல்லூரி கல்வி இயக்குனரும் கூட இதனை கண்காணிக்கவில்லை. தற்போது அங்கீகாரம் இல்லாத இக்கல்லூரியின் முதல்வராக முனைவர்.விஜயலெட்சுமியும், தேர்வு நெறியாளராக முனைவர்.தனலட்சுமியும், துணை தேர்வு நெறியாளராக முனைவர்.கிருஷ்ணமூர்த்தியும் பணியாற்றிவருகிறார்கள்.

2020-21ஆம் கல்வியாண்டில் கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு மற்றும் இயல்பு நிலை பாதிப்பை அனைவரும் எதிர்கொள்ள நேர்ந்தது. அப்போது கல்லூரி வகுப்பறைகளுக்குள்ளே மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆன்லைன் முறையில் மட்டுமே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. தன்னாட்சிக் கல்லூரிக்கான அங்கீகாரத்தை இழந்த நிலையில், உடனே திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து, அதன் இசைவு பெற்ற கல்லூரி என்ற அங்கீகரித்தை பெற்றிருக்கலாம். அந்த வாய்ப்பையும் அன்றைய கல்லூரி நிர்வாகம் தவறவிட்டது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் கல்லூரிகளுக்கான அங்கீகாரங்களை புதுப்பிப்பதற்கு விதிகளை தளர்த்த மறுப்பதாக குற்றச்சாட்டுகள் ஒருபுறம் எழுந்துள்ளன.

உதாரணமாக, பயோ மெட்ரிக் முறையிலான வருகை பதிவேட்டை காரணம் காட்டி திருச்சியில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம் சமிபத்தில் ரத்து செய்யப்பட்டது. அதேசமயம், பயோ மெட்ரிக் முறையிலான வருகை பதிவேட்டை முறையாக பின்பற்றாத பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படவில்லை.

இதனால், மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள நிறுவனங்கள் மாநிலத்துக்கு மாநிலம் பாரபட்சம் காட்டுகிறதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜிப்மர்

மறுபுறத்தில் தமிழ்நாட்டின் உயர்க்கல்வித்துறை உண்மையில் செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் இக்கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் கல்லூரியில் படித்து முடித்த மாணவர்களின் எதிர்காலமும், தற்போது படித்துவரும் மாணவர்களின் எதிர்காலமும் மொத்தத்தில் கேள்விக்குறியாக உள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அங்கிகாரத்தை உடனே புதுப்பிக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வரும் என்ற நம்பிக்கையுடன் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் காத்துக்கிடக்கின்றனர்.