கல்வி

”2.27 கோடி பேருக்கு வேலையிழப்பு” - பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் தகவல்

”2.27 கோடி பேருக்கு வேலையிழப்பு” - பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் தகவல்

webteam

நாடு முழுவதும் கடந்த இரு மாதங்களில் மட்டும் 2 கோடியே 27 லட்சம் பேர் வேலையிழந்து இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் மகேஷ் வியாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “ இரண்டாவது அலையின் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் மட்டும் 2 கோடியே 27 லட்சம் பேர் வேலையிழந்திருக்கின்றனர். மொத்தமாக 40 கோடி பேர் பணியில் இருந்த நிலையில், பொதுமுடக்கத்தால் 2 கோடியே 27 லட்சம் பேருக்கு வேலை பறிபோகியுள்ளது.” என்று கூறியுள்ளார்.

இழந்த வேலைகளை திரும்பப்பெறுவது மிகவும் கடினம் என்று முன்பே கூறிய அவர், “அமைப்புச்சாரா தொழில் துறைசார்ந்த வேலை வாய்ப்புகள் எளிதில் மீளும். ஆனால் அமைப்புச்சார்ந்த தொழில் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் மீள இன்னும் ஒரு வருடம் பிடிக்கும்.பொருளாதாரம் சீராகும்போது நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் முழுநிலைமையும் சீராகும் என்பதில் நம்பிக்கை இல்லை.

அதேபோல கடந்த வருடம் தொடங்கி கடந்த மாதம் வரையில் கணக்கிடப்பட்ட ஆய்வின் படி 1.75 லட்ச குடும்பங்களில் 3 சதவீத குடும்பங்களின் வருமானம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. 55 சதவீத மக்கள் தங்களது வருமானம் குறைந்துள்ளது என்றும் 42 சதவீத மக்கள் தங்களின் வருமான அதே நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக, கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களும் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் தங்களது பணிகளை இழந்துள்ளனர்.