கல்வி

டெட் தேர்வின் 2ம் தாளிலும் 1% பேர் மட்டுமே தேர்ச்சி

டெட் தேர்வின் 2ம் தாளிலும் 1% பேர் மட்டுமே தேர்ச்சி

webteam

ஆசிரியர் தகுதித் தேர்வின்(டெட்) இரண்டாம் தாளில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள், ஜூன் மாதம் 8ம் தேதியும், இரண்டாம் தாள்  9ம் தேதியும் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்த தேர்வுகள் வெளியாகியுள்ளன. முதல் தாள் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகி இருந்த நிலையில், நேற்று இரண்டாம் தாள் முடிவுகள் வெளியிடப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளை 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினர். இவர்களில் சுமார் 500 பேர்தான் தகுதி மதிப்பெண் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின. எனினும், தகுதி பெற்றவர்களின் சதவிகிதம் குறித்த புள்ளி விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. 

இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வின்(டெட்) 2ஆம் தாள் தேர்விலும் 1% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வை 3,79,733 பேர் எழுதிய நிலையில் சுமார் 300 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடஒதுக்கீட்டு பிரிவினரின் தகுதி மதிப்பெண் 82 எனவும், மற்றவர்களின் தகுதி மதிப்பெண் 90 என்றும் ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை நிர்ணயித்துள்ளது. இந்த மதிப்பெண்களை இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே எனக் கூறப்பட்டுள்ளது. 

இதற்குமுன் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், நேரடியாக‌ பணி நியமனம் செய்யப்பட்ட‌ நிலையில், இனி போட்டித் தேர்வு ந‌டத்தப்பட்டே தேர்வு செய்யப்படு‌வார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.