கல்வி

ஆன்லைன் கவுன்சிலிங்: பொறியியல் படிப்பைத் தேர்வு செய்வது எப்படி?

ஆன்லைன் கவுன்சிலிங்: பொறியியல் படிப்பைத் தேர்வு செய்வது எப்படி?

webteam

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம் என உயர்க் கல்வித்துறையின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்புகளை ஆன்லைன் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. கடந்த ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாற்றாக, தமிழக அரசின் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் கவுன்சிலிங்கை நடத்தியது.

வழக்கமாக 60 பொறியியல் பாடப்பிரிவுகள் மற்றும் சுயநிதிமுறையிலான 27 பொறியியல் பாடப்பிரிவுகள் என மொத்தம் 87 பாடப்பிரிவுகளில் கவுன்சிலிங் நடத்தப்படும்.  ஆன்லைன் கவுன்சிலிங் எப்படி நடக்கும்? மாணவர்கள் என்ன செய்யவேண்டும்? என்பதைப் பற்றிப் பார்க்கலாம். கடந்த ஆண்டில் பின்பற்ற நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படலாம்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2020க்கான செயலாளர் டாக்டர். கி. புருசோத்தமன் பேசும்போது, " பாதுகாப்பை கருத்தில்கொண்டு பொறியியல் கவுன்சிலிங் தொடர்பாக மாணவர்கள் நேரில் வருவதைத் தவிர்க்கிறோம். சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் உள்பட அனைத்து  கவுன்சிலிங் நடைமுறைகளும் ஆன்லைன் வழியாகவே நடத்தத் திட்டமிட்டுள்ளோம். யாரும் நேரில் வரத் தேவையில்லை. ஆன்லைன் கவுன்சிலிங் நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்துவருகின்றன" என்றார். 

முதல்கட்ட கவுன்சிலிங்

சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் ஒதுக்கப்படும். அதைத்தொடர்ந்து  தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, முதல் 20 ஆயிரம் இடங்களில் இருக்கும் மாணவர்களை முதற்கட்ட கவுன்சிலிங்கிற்கு அழைப்பார்கள், பின்னர் அதன்படி 5 கட்டமாக நடத்தப்படும்.

சிறப்புப் பிரிவு மாணவர்கள்

மாற்றுத்திறனாளிகள், வொகேஷனல் பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டில் சிறப்பிடம் பெற்றவர்கள் உள்ளிட்ட சிறப்புப்பிரிவு மாணவர்கள் நேரடியாக வரத் தேவையில்லை. ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். கொரோனா காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வைப்புத்தொகை

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், அருந்ததி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான வைப்புத்தொகை ரூ.1000. இதர பிரிவினர்களுக்கு ரூ. 5000. மாணவர்கள் பதிவெண்ணைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்தலாம். அதற்காக தனி போர்ட்டல்கள் செயல்படும். 

ஒருவேளை ஆன்லைனில் பணம் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டால், அந்த மாணவர்கள், தங்களுக்கான கட்டணத்தொகையை ‘The Secretary, TNEA, Chennai’ என்ற முகவரிக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும்.

டிராப்டின் பின்புறம் விண்ணப்பத்தின் எண், பெயர், வரிசை எண், மொபைல் எண்ணைக் குறிப்பிடவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு சேவை மையத்தில் அதை சமர்ப்பிக்கலாம்.  வைப்புத்தொகை கல்லூரியில் சேர்ந்த பின்பு, மாணவர்களுடைய படிப்புக் கட்டணத்தில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.

கடைசி மூன்று நாட்கள்

இந்த நாட்களை சாய்ஸ் பில்லிங் டேஸ் என்று சொல்லலாம். அதாவது மாணவர்கள் படிக்க விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவு ஆகியவற்றை விருப்ப முறையில் தேர்வு செய்வதற்காக கொடுக்கப்படும் நாட்கள்தான் அவை.  

முதல் கட்டத்தில் விருப்ப வரிசை எண் நிரப்புவதற்காகவும், இரண்டாவது கட்டத்தில் கல்லூரி குறியீட்டு எண் நிரப்புவதற்காகவும், மூன்றாவது கட்டத்தில் பாடப்பிரிவு குறியீடு நிரப்புவதற்காகவும் இடம் விடப்பட்டிருக்கும்.

மாணவர்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவு, கல்லூரி ஆகியவற்றில் சேர்வதற்கு சென்ற ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு இருந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்யவேண்டும்.

விருப்பப் பட்டியலில் மாணவர்களால் எவ்வளவு விருப்ப இடங்களை நிரப்பமுடியுமோ அவ்வளவு இடங்களை நிரப்பலாம். முதல் பத்து விருப்ப இடங்களில் குறிப்பிட்டது கிடைக்கவில்லை எனில், பதினோராவது விருப்பத்தில் குறிப்பிட்ட கல்லூரியும், படிப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை செய்த பிறகு பாடப்பிரிவுகளையும், கல்லூரிகளையும் தேர்வு செய்ய வேண்டும்.

கடைசி 2 நாள்

கடைசி இரண்டு நாளில்தான் மாணவர்கள் விரும்பிய கல்லூரியில், விரும்பிய படிப்பில் இடம் கிடைத்திருக்கிறதா என்பது தெரியவரும். விருப்பமான இடத்தை மாணவர் தேர்வுசெய்தால் போதும்.  மின்னஞ்சல் முகவரிக்கு ஒதுக்கீட்டு ஆணை அனுப்பப்படும். அந்த ஒதுக்கீட்டு ஆணையை மாணவர்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு சென்று நேரடியாக கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்.

முதல்கட்ட கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியாமல்போனால்?

இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் பங்கேற்கலாம்.  ஆனால் அப்போது எந்த கல்லூரி, எந்தப் பாடப்பிரிவுகள் இருக்கிறதோ அதைத்தான் தேர்வு செய்யமுடியும்.

ஐடி மற்றும் பாஸ்வேர்டு மறந்துவிட்டால்…

பயப்பட வேண்டாம். மாணவருடைய புகைப்பட அடையாளச்சான்றுடன், அருகிலுள்ள பொறியியல் சேவை மையத்தை அணுகி, தங்களின் விண்ணப்ப எண்ணைச் சொன்னால் பயனர் முகவரியையும் கடவுச்சொல்லையும் பெற்றுத்தந்துவிடுவார்கள்.

கல்லூரி, படிப்பைத் தேர்வு செய்வது எப்படி?

ஒரே பெயரில் பல்வேறு கல்லூரிகள் சின்னச் சின்ன பெயர் மாற்றங்களோடு இருக்கும். அவற்றை கவனமாகப் பார்க்கவேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்லூரிகள் கையேட்டினை நன்றாகப் படித்து புரிந்துகொண்டு, கல்லூரிக்கான குறியீட்டு எண்ணை மிகச் சரியாகவும், பாடப்பிரிவிற்கான பாடக்குறியீட்டு எண்ணையும் தெளிவாகவும் குறிப்பிடுவது அவசியம்.