தமிழகத்தில் இருக்கக்கூடிய 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு பள்ளியில் கூட தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. ஆனால் இந்தி ஆசிரியர்கள் 109 பேரும், சமஸ்கிருதம் கற்பிக்க 53 பேர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அதேபோல 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி சமஸ்கிருதம் கட்டாயம். ஆனால் தமிழ்மொழி கட்டாயமாக எடுத்து படிக்க வேண்டியதில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது. இதற்கு அரசியல் ரீதியிலான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இது தொடர்பாக நியூஸ் 360 விவாதத்தில் கல்வியாளர் காயத்ரி மற்றும் வளன்அறிவு கலந்து கொண்ட தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
காயத்ரி (கல்வியாளர்):
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், மத்திய அரசு ஊழியர்கள் இராணுவம் மற்றும் துணை இராணுவத்தினர்கள் பணி நிமித்தமாக ஒவ்வொரு இடத்திற்கும் இடம்மாறி சென்றுகொண்டே இருப்பார்கள். அப்படி இடம்மாறி செல்லும்போது அவர்களுடைய பிள்ளைகளின் படிப்பில் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்.
இங்கு இந்தி சமஸ்கிரதம் தவிர அந்த மாநிலத்தில் உள்ள பிராந்திய மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச மாணவர்கள் இருக்கும்போதுதான் மொழிவழி பாடம் கற்றுக் கொடுக்கப்படும்.
வளன்அறிவு (தமிழ்துறை பேராசிரியர்)
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஒன்றிய அரசு நடத்துகின்ற நிறுவனம். அது மிகவும் இன்றியமையாதது. இவர்கள் சொல்வதை பார்த்தால் இந்தியாவில் தமிழர்கள் யாருமே மத்திய அரசு ஊழியர்களாக இல்லையா? தமிழர்களுடைய பிள்ளைகள் அங்கு படிக்கவில்லையா?. அங்கு தமிழில் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தில் இயங்குவதை தடைசெய்ய வேண்டும். இந்த பள்ளிகள் தமிழகத்தில் இயங்குவது கொடுமையானது.
எனது தாய்மொழியை படிப்பதற்கு அந்த பள்ளியில் வாய்ப்பில்லை என்றால் நான் எப்படி எனது குழந்தையை அந்த பள்ளியில் சேர்ப்பேன். தமிழ்நாட்டில் தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளில் சமஸ்கிருதம், இந்தி பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களை தமிழக அரசு சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எப்படி தமிழ் ஆசிரியர்களை நியமிக்காமல் இருக்கலாம். இப்படி செய்தால் படிப்பில் தேக்கநிலை ஏற்படும்.