கல்வி

என்எம்எம்எஸ் தேர்வு.... தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களைப் பதிவேற்ற உத்தரவு

என்எம்எம்எஸ் தேர்வு.... தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களைப் பதிவேற்ற உத்தரவு

webteam

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி திறன் தேர்வில் (என்எம்எம்எஸ்) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை செப்டம்பர் 15ம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் அனுப்பியுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, கல்வி உதவித்தொகை பெற தகுதிபெற்ற மாணவ மாணவிகளின் பெயர்ப்பட்டியல் கடந்த ஜூலை 20ம் தேதியன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள நடப்பு கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல் என்ற இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்குமாறும், வெறும் பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளில் பயிலும், முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பதிவேற்றும் பணியை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு, தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக மாணவர்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.