கல்வி

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி.. திருச்சி என்ஐடி மாணவர் அணிகள் முதலிடம்

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி.. திருச்சி என்ஐடி மாணவர் அணிகள் முதலிடம்

webteam

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து நடத்திய ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 போட்டியில் திருச்சி என்ஐடி அணிகள் முதலிடம் பெற்றுள்ளன.

இந்தப் போட்டி ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. இந்தியாவின் மிகச்சிறந்த அணிகள்
பங்குபெற்ற இந்த ஹேக்கத்தானில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள், அவரவர் சவால் வகைகளில் முதலிடம்‌ பெற்றுள்ளனர்.

முதல் குழுவினர் 'குற்றமில்லாத பாரதம்' இலக்கின்கீழ் மத்தியப்பிரதேச காவல்துறை அளித்த சவாலுக்கு விடை தேடினர். சட்ட அமலாக்க நிறுவனங்கள் - எவ்வித சேதமும் ஏற்படாதவாறு பாதுகாப்பான முறையில், ஆதார ஆவணங்களைப் பதிவேற்றவும், சேமிக்கவும், முக்கிய தகவல்களைப் பிரித்தெடுக்கவும், ஆவணங்களைப் பரிமாறவும் ப்ளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் ஓர் ஆதார சேமிப்பு இணைய முகப்பை இந்தக் குழு உருவாக்கியது.

இரண்டாவது குழுவினர், பீகார் அரசின் வேளாண்மைத் துறை வழங்கிய சவாலுக்கு "வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி" என்ற தலைப்பில் விடை தேடினர். இடைத்தரகர்களை நீக்கி, உழவர்களுக்கு அதிகாரம் அளிக்குமாறு, இணையத்தின் மூலம், வேளாண் பண்டங்களுக்கான திறந்த மற்றும் பாதுகாப்பான (ப்ளாக் செயின்) சந்தையை அமைத்து ஒரு நேரடி விடையை வழங்கினர்.

இரு குழுக்களின் முன்மாதிரிச் சாதனைகளை திருச்சி என்ஐடி கல்வி நிலைய இயக்குநர் மினிஷாஜி தாமஸ் மனமார வாழ்த்தினார்.