சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளளனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சென்னை பல்கலைக்கழகத்துக்கு துரைசாமியும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு செல்லதுரையும் துணைவேந்தர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட மோகன், கருணாமூர்த்தி, ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்களை ஆளுநர் நிராகரித்து விட்டார். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 3 அல்லது 4 மாதத்துக்குள் துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவார் என்றும் அன்பழகன் தெரிவித்தார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் தற்போது சென்னை பல்கலைக்கழகத்துக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு பின் மதுரை பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள துரைசாமி, சென்னை பல்கலை.,யின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் ,7-ஆவது ஊதியக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.