கல்வி

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் நீட் தேர்ச்சி விகிதம் 35%-ஐ கூட தாண்டவில்லை: அரசு தகவல்

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் நீட் தேர்ச்சி விகிதம் 35%-ஐ கூட தாண்டவில்லை: அரசு தகவல்

webteam

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த புதிய விவரங்ளை வெளியிட்டது தமிழக பள்ளிக்கல்வித்துறை.

அதன்படி இந்தாண்டு நீட் தேர்வை 17,972 பேர் எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். அவ்வாறு எழுதிய 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 35 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 131 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாது விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களிலும் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் தேர்வெழுதிய 172 அரசுப்பள்ளி மாணவர்களில் 104 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற நீட் தேர்வில் மாநிலம் முழுவதும் 8,061 அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 1,957 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.