பொங்கலுக்கு மறுநாளான ஜன.16-இல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
பொதுத்தேர்வை மாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்வது குறித்து வரும் 16-ஆம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சி,
தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி மூலம் நேரடியாக ஒளிப்பரப்படவுள்ளது. இதனை மாணவர்கள் காணும் வகையில் பள்ளிகளில் ஏற்பாடுகள்
செய்வதற்கு சுற்றறிக்கை அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடியின் உரையை கேட்க வரும் 16-ஆம் தேதி பள்ளி மாணவர்கள் கட்டாயமாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று ஒரு தகவல் பரவியது. இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், பொங்கலுக்கு மறுநாளான ஜன.16-இல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என கூறியுள்ளார். விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தெரிவித்துள்ள செங்கோட்டையன், அப்படி இல்லையென்றால் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கூட தொலைக்காட்சியில் பார்க்கலாம் என தெளிவுபடுத்தியுள்ளார். ஜனவரி 16-ல் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார்.