கல்வி

"10,000 மாணவர்களுக்கு ஆப்செண்டா?"- அமைச்சர் பொன்முடி அளித்த பதில்!

"10,000 மாணவர்களுக்கு ஆப்செண்டா?"- அமைச்சர் பொன்முடி அளித்த பதில்!

நிவேதா ஜெகராஜா

“அண்ணா பல்கலைக்கழக தேர்வில் மாணவர்கள் தாமதமாக பதிவேற்றிய விடைத்தாள்களும் திருத்தம் செய்யப்படும்” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பிப்ரவரி 1ஆம் தேதியில் இருந்து மார்ச் 12ஆம் தேதி வரை, ஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெற்றன. ஆன்லைன் தேர்வில் விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றியதாக கூறி மாணவர்களுக்கு ஆப்சென்ட் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. இது குறித்து விளக்கமளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "தாமதமாக பதிவேற்றிய மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தம் செய்யப்படும். ஆப்சென்ட் என்று போட்டிருந்தால் தவறு. உடனடியாக சரிசெய்யப்படும். விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு அதற்கான ஊதியம் விரைவில் வழங்கப்படும். 10,000 மாணவர்களின் விடைத்தாள் திருத்தப்படாது என்று பரப்பப்படும் தகவல் தவறானது. மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்.

விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு, ஒரு வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடித் தேர்வுகள் மட்டுமே நடைபெறும். கல்வியின் தரத்தை உயர்த்தை வேண்டும் என்ற அடிப்படையில் இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடைபெறும். ஆன்லைன் தேர்வுகள் நடைபெறாது. ஆன்லைன் தேர்வுகளால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நாளை முதல்  நேரடித் தேர்வுகளை எழுத வேண்டும். வெற்றி பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.