சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது...
“தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2023-க்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2,29,175. அதில் பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 1,87,847. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 18,767 பேர் அதாவது 11.09 சதவீதம் பேர் அதிகம். அவ்வளவு பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 28,425 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 5,842 (25.86 சதவீதம்) கூடுதலாகும். இந்த கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளுக்காக வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் 102 பேர் 200 க்கு, 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். அதில், 100 மாணவர்கள் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.
பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்கள் தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலும் அல்லது வேறு குறைகள் இருந்தாலும் இன்று முதல் ஐந்து நாட்களுக்குள், அதாவது 30-06-2023 க்குள் தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்தை அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்திக் கொள்ளலாம்.
பொறியியல் படிப்புகளுக்கு வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் ஆண்கள் 1,06,384 பேர், பெண்கள் 72,558 பேர், பால்புதுமையினர் 17 பேர். தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் தர்மபுரியைச் சேர்ந்த மாணவி மகாலட்சுமி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவர் சரவணகுமார் ஆகியோர்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர வேண்டும் என்றால் கணித பாடத்தை கட்டாயம் பயின்று இருக்க வேண்டும் . AICTE விதிமுறைகள் மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் வேண்டுமானால் பொருந்தும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் கணித பாடப்பிரிவை பயின்றிருந்தால் மட்டுமே பொறியியல் பாடப் பிரிவில் சேர முடியும்.
இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக இருக்கிறது. 10+2+3 என்ற முறையிலும் அரசு உறுதியாக இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும்” என்று கூறினார்.