கல்வி

“ஆளுநரிடமிருந்து நீட் விலக்கு கிடைக்கும் வரை... நீட் பயிற்சி தொடரும்!”- அமைச்சர் உறுதி

“ஆளுநரிடமிருந்து நீட் விலக்கு கிடைக்கும் வரை... நீட் பயிற்சி தொடரும்!”- அமைச்சர் உறுதி

webteam

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு கிடைக்கும் வரை மாணவகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்று பேசியுள்ளார்.

தமிழ்நாடு அறக்கட்டளை என்ற அமைப்பின் ஆண்டு விழா அதன் சென்னை கிளையின் (Chennai Chapter) ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ராஜரத்தினம் தலைமையில் நேற்று (அக்.8) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு அறக்கட்டளையின் ஆண்டறிக்கையை வெளியிட்டு, சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளை வழங்கினார். பின்னர் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊட்டச்சத்து திட்டத்தை துவக்கி வைத்தார்.

முன்னதாக பள்ளிகளுக்கான விருதுகளையும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் மற்றும் விஐடி குழும துணை தலைவர் ஜி.வி.செல்வம், அறக்கட்டளையின் அமெரிக்க பிரிவு தலைவர் முருகன் கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தபோது, “தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பின் கீழ் வழங்கப்படும் உதவிகளை ஒருங்கிணைக்கும் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு நவம்பர் மாதத்திற்குள் முழுமை பெற்று பயன்பாட்டிற்கு வரும்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், “படிப்பில் மட்டுமே மாணவர்கள் முழு கவனத்தை செலுத்த வேண்டும். ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு கிடைக்கும் வரை மாணவகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

அக்.10 அன்று நிதியமைச்சர் உடன் நடக்கும் கூட்டத்தில் விவாதித்து, எல்.கே.ஜி. யு.கே.ஜி. ஆசிரியர்கள் ஊதியம் குறைவாக இருப்பது குறித்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும். பள்ளிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு வழங்க மாவட்ட காவல்துறைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படவில்லை, திட்டமிட்டு மூடப்படுவதாக கூறுவது பொய்ப் பிரச்சாரம்” என்றார்.