கல்வி

“நீட் தேர்வுக்கு அரசு பயிற்சி அளிக்கவில்லை என சொல்வதை ஏற்கமுடியாது”- அமைச்சர் பேச்சு

“நீட் தேர்வுக்கு அரசு பயிற்சி அளிக்கவில்லை என சொல்வதை ஏற்கமுடியாது”- அமைச்சர் பேச்சு

webteam

“நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்படவில்லை என்பதை ஏற்க முடியாது” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசியுள்ளார்.

சென்னை கிறுத்துவ மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்க நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பாரத சாரண சாரணிய இயக்க தமிழ்நாடு தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கடந்தாண்டை காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும் அந்த எண்ணிக்கை போதாது. நீட் தேர்வு தேர்ச்சியை பொறுத்தவரை தன்னிறைவு அடையும் வரை மாணவர்களுக்கு பயிற்சி என்பது அளிக்கப்படும்.

மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறக்கூடிய போட்டித் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே மாடல் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் தற்போது 4 லட்சமாக உள்ள மாணவர் எண்ணிக்கை 10 லட்சம் ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்