கல்வி

“இந்த ஆண்டு முதல் உடற்கல்விக்கு தனி அட்டவணை தரப்படும்”- அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

“இந்த ஆண்டு முதல் உடற்கல்விக்கு தனி அட்டவணை தரப்படும்”- அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

நிவேதா ஜெகராஜா

பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளில் எந்தப் பயிற்சிகளையெல்லாம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது பற்றியும், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் கற்று தரவேண்டிய விளையாட்டுகள் குறித்துமான அட்டவணையை, இந்த ஆண்டு முதல் பள்ளி கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

விளையாட்டு போட்டிகளில் இந்தியா ஒவ்வொரு முறை ஒரு பதக்கத்தை இழக்கும்போதும், `பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளுக்கு ஒழுங்காக அனுமதி வழங்கி இருந்தால் இந்த நிலை ஏன் ஏற்பட போகிறது?’ என்கிற வசனம் எப்போதும் கேட்டு கொண்டே உள்ளது. பள்ளிகளில் எந்த அளவுக்கு உடற்கல்வி வகுப்புகள் முறையாக நடக்கிறது என்பது குறித்து இந்த இடத்தில் கேள்வி கேட்க வேண்டியதும் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை விளையாட்டு போட்டிகள் என்பது பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

உண்மையில் ஒரு விளையாட்டு வீரரின் அடிப்படை பயணமே பள்ளிகளில் இருந்து துவங்கும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆண்டிற்கு ஒரு விளையாட்டு தொடர் மட்டுமே நடத்தப்படுகிறது. வட்டம், மாவட்டம், மாநில அளவுகளில் பல போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும் தமிழகத்தில் உள்ள 95% பள்ளிகளில் படித்து வரக்கூடிய விளையாட்டு வீரர்களின் விளையாட்டு வாழ்க்கை ஆண்டிற்கு அதிகபட்சமாகவே மூன்று மாதங்கள் மட்டுமே.

சமீப காலமாக மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக, பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதே இல்லை. அப்படியே நடத்தபட்டாலும், அவை வெறும் பெயரளவில் மட்டுமே நடத்தப்படுவதுண்டு. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற குத்து சண்டை வீரர் தேவராஜ் இதுகுறித்து நம்மிடையே பேசுகையில், “பள்ளிகளில் உடற்கல்விக்கு தேவையான அடிப்படை வசதிகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் இருந்தே முறையான பயிற்சிகள் வழங்பட்டதால் மட்டுமே, நான் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் எல்லாம் பங்கேற்க முடிந்தது. ஆகவே பள்ளிகளில் விளையாட்டு போட்டிகளை மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதிக வீரர்களை உருவாக்க முடியும்” என்றார்.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு முதல் 'தேர்வுகளுக்கு வெளியிடப்படுவதுபோலவே உடற்கல்விக்கு என தனி அட்டவணை வெளியிடப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்தது. இதை ஏற்றுள்ளது பள்ளிக்கல்வித்துறை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து தெரிவிக்கையில், `பள்ளிகளில் மாணவர்களை ஒழுங்குமுறைபடுத்த விளையாட்டு போட்டிகள் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது எனவே உடற்கல்வி வகுப்புகள் முறையாக இந்த ஆண்டு முதல் செயல்படும்’ என்றார்.

பல ஆயிரம் கோடிகளில் விளையாட்டை மேம்படுத்த கட்டமைப்பு வசதிகள் நாட்டில் அமைக்கப்பட்டாலும், சிறிய வயது முதல் முறையான பயிற்சி வழங்கினால் மட்டுமே விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு தயாராக முடியும். அதேபோல எவ்வளவுதான் பயிற்சிகள் மேற்கொண்டாலும் அதன் அளவை வெளிகாட்டும் ஒரே இடம் போட்டிகள் மட்டும் தான். எனவே தமிழக விளையாட்டு வீரர்களின் அடிப்படையாக இருக்கக்கூடிய பள்ளி கல்வி நிலையங்களில், போட்டிகள் அதிகமாக நடத்தப்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்பாகவும் உள்ளது. உடற்கல்விக்கு முக்கியத்துவம் தருவதோடு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக அதிக போட்டிகளையும் நடத்த வேண்டும் என்பதும் விளையாட்டுத்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- சந்தான குமார்