கல்வி

``அரசு கொண்டு வரும் திட்டங்களை மாணவர்கள் நல்ல விதத்தில் பயன்படுத்தனும்”- அமைச்சர் பேச்சு

``அரசு கொண்டு வரும் திட்டங்களை மாணவர்கள் நல்ல விதத்தில் பயன்படுத்தனும்”- அமைச்சர் பேச்சு

webteam

திருச்சி சையது முர்துஷா அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று நூலக செயலியினை அறிமுகம் செய்துவைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், “வாசிப்பு இயக்கத்தை பயன்படுத்திக்கொண்டு புத்தக வாசிப்பை மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். நூலகத்தில் தினசரி 20 நிமிடங்கள் படித்து, உலக அனுபவத்தை பெற்றுக்கொண்டால், பின்னர் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டிய தேவை இருக்காது. பாட புத்தகங்களை தாண்டி பிற புத்தகங்களையும் படிக்கும் விதத்தில் பாட வேலைகளை வடிவமைத்துள்ளோம்.

மாணவர்களை படிப்பில் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக 'புத்தகம் படிக்கலாம், வெளிநாடு பறக்கலாம்' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. படித்ததன் மூலம் கிடைத்த அறிவை, ஓவியமாக, கட்டுரையாக, நாடகமாக மாற்றி, மாணவர்கள் புதிய உலகை படைக்க வேண்டும்.

தொடர்ந்து படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து, அவர்களை நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடுவதற்கும், பிற நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நூலகங்களுக்கு அழைத்து செல்லவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி அரசு கொண்டுவரும் திட்டங்களை நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது புத்தகங்கள் மட்டுமே” என்றார்.