கல்வி

“6-8ம் வகுப்புகளுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும்?” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்

“6-8ம் வகுப்புகளுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும்?” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் 6 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் முடிவாக பள்ளி திறப்பு பற்றிய அறிக்கையை அமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார் அவர். அந்த அறிக்கையில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை அக். முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுகையில், "முதல்வரிடம் விரிவான அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். மருத்துவத்துறை நிபுணர்களுடன் ஆலோசித்துவிட்டு, முதல்வர் முடிவெடுப்பார். கொரோனா கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பாரோ, அதே போல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்தும் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து முதல்வர் முடிவு எடுப்பார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை என்பதால், இவ்விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்கிறோம்.

தற்போது நடந்துக்கொண்டிருக்கும் 9 - 12 வகுப்புகளுக்கு மாணவர்களை பள்ளிக்கு வரும்படி நிர்வாகமோ ஆசிரியர்களோ கட்டாயப்படுத்தக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர் சாந்தி இதுகுறித்து தெரிவிக்கையில், “பள்ளிகளை இப்போது திறப்பது மாணவர்களின் மனநலனுக்கு உகந்ததாக இருக்கும் என்றே நினைக்கிறோம். எதுவாகினும் மாணவர்களின் நலன் கருதி அரசு முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.