கல்வி

பொறியியல் படிப்புகளில் சேர குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் மாற்றம்

பொறியியல் படிப்புகளில் சேர குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் மாற்றம்

Rasus

பொறியியல் படிப்புகளில் சேர, பட்டியலின மாணவர்களுக்கான குறைந்தபட்ச‌ தகுதி மதிப்பெண்ணை 35 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர பட்டியலின மாணவர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் ஏற்கனவே 35 சதவிகிதமாக இருந்தது. பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 45 சதவிகிதமாகவும், பொதுப்பிரிவினருக்கு 50 சதவிகிதமாகவும் இருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவினருக்கு 40 சதவிகிதம் எனக் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இருந்தது.

இந்நிலையில், பட்டியலின பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை 40 சதவிகிதமாக உயர்த்தி தமிழக உயர்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. பொதுப்பிரிவில் உள்ள மாணவர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 45 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அரசாணைப்படி, பொதுப்பிரிவில் உள்ளவர்கள் தவிர அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40 சதவிகிதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதா‌வது, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவு மாணவர்களுக்கு 45 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் பரிந்துரைப்படி இந்த அரசாணை பிறப்பிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வரும் 2019 - 20 கல்வி ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இதன் அடிப்படையில் நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலின மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண் உயர்த்தப்பட்டிருப்பதால், அந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கை குறைய வாய்ப்புள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மதிப்பெண் குறைக்கப்பட்டிருப்பதால், அந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.