கல்வி

பள்ளிகளை திறக்கலாமா? பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் அரசு.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

webteam

பள்ளி திறப்பு தொடர்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் 2ஆவது முறையாக நடைபெற உள்ளது

கொரோனா பொதுமுடக்கத்தால் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், 9 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமலே உள்ளன. அதனால், கல்வித் தொலைக்காட்சி, ஆன்லைன் கல்வி என புதிய முறைகளைக் கொண்டு வந்த பள்ளி கல்வித்துறை, இதர நடவடிக்கைககளையும் மேற்கொண்டது. பள்ளிகளைத் திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து, கடந்த நவம்பர் 9ஆம் தேதி பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

பொதுத்தேர்வு நெருங்கி வருவதால்,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொங்கல் பண்டிகைக்குப்பின் பள்ளிகளைத் திறக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதனால், இதுகுறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கும் பணியைத் தொடங்க உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. அதற்காக, சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். பெற்றோர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையிலேயே, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றார்

பெற்றோரின் கருத்தை கேட்க தமிழகம் முழுவதும் அரசு, தனியார் சிபிஎஸ்இ என, சுமார் 12 ஆயிரம் பள்ளிகளில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் 8ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில், நாள் ஒன்றுக்கு 100 பெற்றோர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பெருந்தொற்று காலத்தில் மாணவர்களால் சமூகப் பரவல் ஏற்பட்டுவிடாமல் இருக்க, அரசு கவனமாக முடிவெடுக்க வேண்டும் என்கின்றனர், ஆசிரியர் சங்கத்தினர்.

இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறித்திருந்தார். பெற்றோர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தால் பள்ளிகள் திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டால் கல்வி விவகாரத்தில் அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.