கல்வி

14 துப்புரவு பணியாளர்கள் வேலை : எம்.பி.ஏ., இன்ஜினியர்ஸ் உட்பட 4,000 பேர் விண்ணப்பம்

14 துப்புரவு பணியாளர்கள் வேலை : எம்.பி.ஏ., இன்ஜினியர்ஸ் உட்பட 4,000 பேர் விண்ணப்பம்

webteam

தமிழக தலைமைச் செயலகத்தில் 14 துப்புறவு பணியாளர்கள் வேலைக்கு எம்.பி.ஏ மற்றும் பொறியியல் படித்தவர்கள் உட்பட 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னையில் உள்ள தலைமை செயலத்தில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணிக்காக 14 பேர் தேவை என்ற வேலைவாய்ப்பு செய்தி கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்தப் பணிக்காக சுமார் 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் எம்.பி.ஏ., பொறியியல், கலை மற்று அறிவியல் பட்டதாரிகள் உள்ளிட்டோரும் அடங்குவர். விண்ணப்பித்தவர்களில் 3930 பேருக்கு தகுதித்தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இந்தப் பணிகளுக்கான மாத ஊதிய வரம்பாக ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர். இதில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், 4 பொதுப்பிரிவினரும், 4 ஓபிசி பிரிவினரும், 3 பிற்படுத்தப்பட்டோரும், 2 பட்டியல் இனத்தவரும், ஒரு பழங்குடியினரும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த வேலைக்கான கல்வித் தகுதி என தனிப்பட்ட வகையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் விண்ணப்பத்தாரர்கள் கட்டாயம் சிறந்த உடல்தகுதி கொண்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நடைபெறவுள்ள தகுதித்தேர்வில், எம்.பி.ஏ., பொறியியல் மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுடன், படிக்காதவர்கள் போட்டியிட வேண்டும். அத்துடன் அரவு வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்தவர்களும் இதில் அடங்குவர். 

இந்திய அளவில் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் 62 பியூன் வேலைக்கு பி.எச்.டி, பட்டபடிப்பு படித்தவர்கள் உட்பட 93,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். மும்பையில் உள்ள கேண்டீன் ஒன்றில் 13 பேர் வேலைக்கு சுமார் 7,000 பேர் விண்ணப்பிடித்திருந்தனர்.