கல்வி

திட்டமிட்டபடி மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு?

திட்டமிட்டபடி மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு?

webteam

பிள்ஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3-ஆம் தேதி முதல் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில், பிளஸ் 2 செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதால் பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆயத்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3-ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதில், செய்முறை தேர்வுகள் நடைபெறும் ஆய்வகங்களின் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்தே வைத்திருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மாணவர் குழுவின் செய்முறை தேர்வுக்கு முன்னரும் பின்னரும் அறைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் எனவும், கருவிகளையும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சானிடைசர் அருகே தீப்பற்றக் கூடிய பொருட்களை வைக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக வேதியியல் ஆய்வகங்களில் திரவங்களை, வாய் மூலம் உறிஞ்சி எடுக்க பயன்படுத்தப்படும் "பிப்பெட்"-டை பயன்படுத்த வேண்டாம் எனவும், பிப்பெட்டுக்கு பதிலாக திரவங்களை எடுக்க "பியூரெட்" அல்லது டெஸ்ட் டியூப்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"பிப்பெட்" பயன்படுத்தாததால் துல்லியமான ஆய்வு முடிவு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அவற்றுக்கேற்க ஆய்வு மதிப்புகளை மாற்றி கணக்கிட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளில் சானிடைசர் பயன்படுத்தியிருப்பதால், எளிதில் தீப்பிடிக்கும் கருவிகளை கையாள்வதற்கு முன் கைகளை நன்கு கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயிரியல் ஆய்வகங்களில் மைக்ரோஸ்கோப் கருவிகள், இயற்பியல் ஆய்வகங்களில் ஸ்பெக்ட்ரோ மீட்டர் செய்முறைகளை மேற்கொள்ள வேண்டாம் என வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு குணமடைந்தபின் வேறு ஒரு நாளில் செய்முறைத் தேர்வு நடத்தலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.