கல்வி

`கல்விச்சான்றிதழ்கள் சந்தைப்பொருளல்ல’- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நிவேதா ஜெகராஜா

கல்விச்சான்றிதழ்கள் சந்தைப் பொருளல்ல எனத் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களிடம் பெற்ற சான்றிதழ்களை திரும்ப வழங்கும்படி, சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 - 2021 ம் கல்வியாண்டுகளில் சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, மதுரை, தூத்துக்குடி, தேனி மருத்துவ கல்லூரிகளில் மேற்படிப்பு முடித்த கிரிதரன் உள்ளிட்ட 25 மருத்துவர்கள், மேற்படிப்பில் சேரும்போது எழுதிக் கொடுத்த உத்தரவாதத்தின்படி 2021 மே மாதம் முதல் 10 மாதங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினர். அதன் பின் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், தங்கள் உண்மைச் சான்றிதழ்களை வழங்கும்படி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், உத்தரவாத பத்திரத்தில் குறிப்பிட்டபடி 2 ஆண்டுகளை முழுமையாக முடிக்காத காரணத்தால் சான்றிதழ்களை தர முடியாது என கல்லூரிகள் மறுத்துள்ளன.

இதையடுத்து, தங்கள் சான்றிதழ்களை வழங்க உத்தரவிடக் கோரி 25 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், மனுதாரர்களுடன் படித்த சக மாணவர்கள் சான்றிதழ் கோரி தாக்கல் செய்த வழக்கில், சான்றிதழ்களை திரும்ப வழங்கும்படி மருத்துவ கல்லூரிகளின் டீன்களுக்கு மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, மனுதாரர்களின் சான்றிதழ்களை 15 நாட்களில் திரும்ப வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கல்விச் சான்றிதழ்கள் சந்தைப் பொருளல்ல எனக் குறிப்பிட்ட நீதிபதி, இந்திய ஒப்பந்தச் சட்டப்படி சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் தங்கள் வசம் வைத்துக் கொள்ள முடியாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டார்.