கல்வி

நீட் விவகாரம்: கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Sinekadhara

நீட் பாதிப்புகளை ஆராயும் ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாஜகவின் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்தது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கவேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதை ரத்து செய்யக்கோரியும் பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது என்றும், மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்த சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவேண்டும் என தலைமை நீதிபதி கூறியிருந்தார். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கரு.நாகராஜன் அரசியல் பிரமுகர் என்ற அடிப்படையிலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கிடையே திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட தோழமை கட்சிகளும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு என்பவரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுவாக தங்களை அனுமதிக்கவேண்டும் எனவும், நாகராஜன் வழக்கை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்த அனைத்து வழக்குகளும் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து ஜூலை 8ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.