கல்வி

பழங்குடி மாணவர்களுக்கு ஐடிஐ பயிற்சி... இடைநிற்றலை நிறுத்திய அரசுப் பள்ளி ஆசிரியை!

பழங்குடி மாணவர்களுக்கு ஐடிஐ பயிற்சி... இடைநிற்றலை நிறுத்திய அரசுப் பள்ளி ஆசிரியை!

webteam

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள கார்குடி அரசுப் பழங்குடியினர் உறைவிடப் பள்ளி ஆசிரியை கலாவதியின் உதவிகள் வகுப்பறையைக் கடந்து மாணவர்களின் எதிர்காலத்திற்கானதாக இருக்கிறது. அதாவது, தன்னுடைய 35 மாணவர்களை பழங்குடியினர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்த்து சத்தமில்லாமல் சாதனை படைத்துள்ளார்.

பள்ளியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தாலும் கலாவதியின் பணி அத்துடன் முடிந்துவிடுவதில்லை. உதவி தேவைப்படும் மாணவர்களைக் கண்டறிந்து உதவி செய்வதில் முனைப்பாக இருந்துவருகிறார். பிளஸ் டூ முடித்துவிட்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த முதுமலையைச் சேர்ந்த 20 வயதான மாணவி கார்த்தியாயினி இன்று பிளம்பிங் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

கோப்புப் படம் 

வகுப்பில் பாடம் எடுப்பதோடு மட்டும் தன் பணியை நிறுத்திக்கொள்ளாமல், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான புதிய பாதையைக் காட்டும் வழிகாட்டியாக விளங்குகிறார் ஆசிரியை கலாவதி. கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ பழங்குடி மாணவர்களின் உயர்கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் ஏணியாக இருந்திருக்கிறார்.

"முதலில் பழங்குடி மக்களுடன் நெருங்கிப் பழகுவது மிகவும் சிரமமான விஷயம். முதல் அந்த சமூகத்தினருடன் இணைந்து அவர்களுடைய வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ளவேண்டும். இதை நான்கு ஆண்டுகளாக நான் செய்துவருகிறேன். எல்லோருமே தினக்கூலித் தொழிலாளர்கள். தங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்ட அவர்களுக்குத் தெரியாது" என்கிறார் கலாவதி.