கல்வி

‘முத்ரா யோஜனா’ கடன் திட்டம் மூலம் கிடைத்த பலன் என்ன ?

‘முத்ரா யோஜனா’ கடன் திட்டம் மூலம் கிடைத்த பலன் என்ன ?

webteam

மத்திய அரசின் ‘முத்ரா யோஜனா’ எனும் தொழில்முனைவோருக்கான கடன் திட்டத்தில் 5 ல் ஒருவர் மட்டுமே புதிய தொழில் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘முத்ரா’ திட்டம் தொடர்பான தகவல் தொகுப்பை ‘தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலகட்டத்தில், சுமார் 97,000 கடன் பெற்றோரிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. ‘முத்ரா’ திட்டத்தின் மூலம் மொத்தம் 5.71 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவில் கடனாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை ‘முத்ரா’ திட்டத்தின் உள்ள மூன்று வகையான கடன்களின் கீழ் வழங்கப்பட்டிருக்கிறது.

மூன்று வகைகள் :

‘ஷிசு’ கடன் திட்டம் - ரூ.50,000 வரை

‘கிஷோர்’ கடன் திட்டம் - ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை

‘தருண்’ கடன் திட்டம் - ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை  

இந்த மூன்று வகையான கடன் திட்டங்கள் மூலம், முதல் 3 வருடங்களில் 12.27 கோடி வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. சராசரியாக ஒரு கணக்கிற்கு ரூ.46,536 வழங்கப்பட்டிருக்கிறது. இதில் ‘ஷிசு’ கடன் திட்டம் மூலம் 42% தொகையும், ‘கிஷோர்’ திட்டம் மூலம் 34% தொகையும், தருண் மூலம் 24% தொகையும் செலுத்தப்பட்டிருக்கிறது.

அதேசமயம் ‘ஷிசு’ திட்டத்தின் மூலமே அதிகபட்சமாக 66% புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக ‘கிஷோர்’ திட்டம் மூலம் ரூ.18.85% புதிய வேலைகளும், ‘தருண்’ திட்டத்தின்படி 15.51% புதிய வேலைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வொரு 5.1 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக ஒரு புதிய வேலைவாய்ப்பு உருவாகியிருக்கிறது. 

இந்த சேவைகள் மற்றும் வர்த்தகத்தில் மூலம் மூன்றில் ஒருவருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு உருவாகியிருக்கிறது. சேவைத்துறையில் 38.46 லட்சம் அல்லது 34.34% மற்றும் வர்த்தகத்துறையில் 37.21 லட்சம் அல்லது 33.23% வேலைகள் ஏற்பட்டிருக்கின்றன. கூட்டு வேளாண்மையின் கீழ் 22.77 லட்சம் (20.33%) வேலைகளும், உற்பத்தி துறையில் 13.10 லட்சம் (11.7%) வேலைகளும் உருவாகியிருக்கின்றன.

‘முத்ரா’ மூலம் வழங்கப்பட்ட கடன்கள் :

புதிய தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் - 19,396

தொழில் விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்ட கடன்கள் - 74,979

மூன்று வகையான கடன்களின் உருவான வேலைகள் :

ஷிசு கடன் திட்டம் - 73,91,974 வேலைகள்

கிஷோர் கடன் திட்டம் - 21,11,134 வேலைகள்

தருண் கடன் திட்டம் - 16,96,872 வேலைகள்

மொத்த வேலைகளின் எண்ணிக்கை - 1,11,99,980

‘ஷிசு’ திட்டத்தின் கீழ் 43,64,088 பேர் சொந்த தொழில் செய்பவர்கள், 30,27,886 பேர் வேலை பெற்றவர்கள். ‘கிஷோர்’ திட்டத்தின் கீழ் 6,25,575 பேர் சொந்த தொழில் செய்பவர்கள், 14,85,559 பேர் வேலை பெற்றவர்கள். ‘தருண்’ திட்டத்தின் கீழ் 1,16,803 பேர் சொந்த தொழில் செய்பவர்கள், 15,80,069 பேர் வேலை பெற்றவர்கள். 

இந்த அறிக்கையை மத்திய அரசு தொழிலாளர் துறையின் கீழ் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையை தயாரிக்கும் பணியை தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் செய்திருக்கிறது. கடந்த 2018ஆம் டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மத்திய அரசு இன்னும் பொது அறிவிப்பாக வெளியிடவில்லை. இந்த அறிக்கையின் படி மொத்தம் வழங்கப்பட்டிருக்கும் கடன்களின் எண்ணிக்கையில் 10% வேலைவாய்ப்பு கூட உருவாகவில்லை எனக் கூறப்பட்டிருக்கிறது. 

கார்பரேட் சாராத நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காகவும், சிறு, குறு தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காகவும் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதே ‘முத்ரா யோஜனா’ கடன் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.