கல்வி

லாக்டவுனால் அதிகரிக்கும் வேலையின்மை பிரச்னை: காரணமும் தீர்வும் - ஓர் விரிவான அலசல்

லாக்டவுனால் அதிகரிக்கும் வேலையின்மை பிரச்னை: காரணமும் தீர்வும் - ஓர் விரிவான அலசல்

webteam

இந்தியாவில், கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனால் அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கம், பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் பாதித்ததோடு, வேலையின்மையையும் அதிகரித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின் கட்டுப்பாடுகளுடன் தொழில்நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்க அனுமதியும் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்த நிலையில், பலர் வேலை இழக்கக் கூடிய சூழ்நிலை உருவானது.

7.11 சதவீதமாக அதிகரித்த வேலையின்மை சதவிகிதம்

கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் வேலையின்மை சதவிகிதம் 7.11ஆக அதிகரித்துள்ளதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ILOSTAT நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அதில், “ தற்போது மீண்டும் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், வேலையின்மை பிரச்னை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வேலையின்மை மே மாதத்தில் இரட்டை இலக்கை எட்ட வாய்ப்புள்ளது. இந்த கொரோனா காலத்தில் சில்லறை வணிகம், உற்பத்தி, போக்குவரத்து, வேளாண், தொழில்நுட்ப துறைகளும், கல்வி நிறுவனங்கள் உட்பட பல துறைகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கிராமப்புறங்களில் வேலையின்மை 9.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தியா, மே மாதத்தில் மட்டும் 10 மில்லியன் வேலை இழப்புகளை சந்தித்துள்ளது.” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த பிரச்னை குறித்து நியூஸ் 360 நிகழ்ச்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய கிஸ்ஃபுலோ நிறுவனர் சுரேஷ் சம்பந்தம், “இந்த வருடத்திற்குள் தடுப்பூசி போடும் பணி முடிவடைந்தால் பொருளாதாரம் உயர்ந்து மீண்டும் வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதில் இரண்டு பிரச்னைகள் உள்ளன. ஒன்று தடுப்பூசி பற்றாக்குறை, மற்றொன்று தடுப்பூசி குறித்து தமிழக மக்களிடம் இருக்கும் பயம். இவை இரண்டையும் சரி செய்து ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் தடுப்பூசி போடும் பணியை முடித்தால் பொருளாதாரம் மீண்டும் உயர்ந்து வேலை வாய்ப்பு உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கொரோனா தொற்றால் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள், உயர்தர உணவகங்கள் நடத்துவோர், சில்லறை வணிகம் செய்வோர், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சில்லறை வணிகமும், உயர்தர உணவகங்களும் தங்களது பழைய நிலைமையை மீண்டும் எட்டி விடும் ஆனால் கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைகள் மீள இன்னும் காலம் தேவைப்படும். ஆகையால் கட்டுமானதுறையினர் வேறு துறைக்கு மாறுவது நல்லது.

குறிப்பாக அமைப்பு சாரா நிறுவனங்களில் பணியாற்றி வந்த பெண்களில் 40 முதல் 50 சதவீதத்தினருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மே மாத நிலவரப்படி 23 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மற்றொரு ஆய்வில் ஏப்ரல் மாத நிலவரப்படி 75 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் அதில் 35 லட்சம் பேர் மாத சம்பளம் வாங்கக்கூடியவர்கள் என்பது தெரியவந்துள்ளது'' இவ்வாறு கூறியுள்ளார்.

வேலையின்மை நிலவரம்: உலக அளவில்

கொரோனா முதல் அலை வேகமாகப் பரவத் தொடங்கிய காலத்தில் பல்வேறு நாடுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தின. இதனால் உலக நாடுகளின் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவை பெருமளவில் பாதிக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த ஆண்டு புள்ளி விவரங்களின் படி அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவில் வேலை வாய்ப்பின்மை 28.5 சதவீதமாக உள்ளது. ஆனால் கத்தார், கம்போடியா, பஹ்ரைன், தாய்லாந்து ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார உற்பத்தியைக் கொண்டிருக்கும் நாடுகளான ஜப்பானில் கொரோனா காரணமாக வேலைவாய்ப்பின்மை என்பது 2.3 சதவீதமாக உள்ளது. ஜெர்மனியில் வேலைவாய்ப்பின்மை 3 சதவீதமாக உள்ள நிலையில், அமெரிக்காவில் அது 3.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

பிரிட்டனில் 4.1 சதவீதமாகவும், சீனாவில் 4.4 சதவீதமாகவும், இந்தியாவில் 5.4 சதவீதமாகவும் வேலைவாய்ப்பின்மை கணக்கிடப்பட்டுள்ளது. இவை தவிர கொரோனாவின் கோரப்பிடியில் இன்னும் சில நாடுகளிலும் உள்நாட்டு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனடாவில் 5.4 சதவீதம் வேலைவாய்ப்பின்மை, ஃபிரான்சில் 8.3 சதவீதம், இத்தாலியில் 9.8 சதவீதம், ப்ரேசிலில் 12 சதவீதம் என வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வேலை வாய்ப்பின்மை வீதமானது வரக் கூடிய நாட்களில் மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது'.

இந்த நிலவரத்தை கருத்தில் கொண்டு பேசிய சுரேஷ் சம்பந்தம் மேலும் பேசுகையில், “ தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்ததொழிலாளர்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். இதனால் மற்ற மாநிலங்கள் போல் நமக்கு அதிக பாதிப்பு இருக்காது. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர்களை பொருத்தவரை, அரபு நாடுகளில் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். ஆனால் அங்கு வேலை இழப்பு சதவீதம் மிகக்குறைவானதாகவே இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி இந்திய அளவில் 4,80,000 வேலை வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் 36,000 வேலை வாய்ப்புகளும், கர்நாடகாவில் 1,31,000 வேலை வாய்ப்புகள் உள்ளன.

இளைஞர்கள் அணுக வேண்டிய தளங்கள்

நான் இங்கு இரண்டு இணையதளங்களை பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

இந்த தளங்களில் வீட்டிலிருந்தே பணிபுரியும் மாதிரியான வேலைகள் இருக்கின்றன.

இந்த தளங்களில் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் நம்மை வளர்த்தெடுப்பதற்தான படிப்புகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி நமது எதிர்காலத்தைக் கட்டமைத்துக்கொள்ளலாம். இந்த நெருக்கடியான சூழ்நிலையும் நமக்கு ஒரு வாய்ப்புதான்” என்றார்.

வீடியோ வடிவில் பார்க்க >>