கல்வி

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்... அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்... அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை ஏப்ரல் மாதத்தில் 7.83 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

CMIE எனப்படும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி நகர்ப்புறப்பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை மார்ச் மாதத்தில் 8.28 சதவிகிதத்திலிருந்து ஏப்ரல் மாதத்தில் 9.22 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 7.18 சதவிகிதமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகபட்சமாக ஹரியானாவில் 34.5 சதவிகிதமா இருந்ததாகவும், ராஜஸ்தானில் 28.8 சதவிகிதமாகவும், பீகாரில் 21.1 சதவிகிதமாகவும் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை 3.2 சதவிகிதமாக இருந்ததாக சி.எம்.ஐ.இ அறிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை செவர்லே, மேன் டிரக்ஸ், யுனைட்டட் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன், ஃபோர்டு, ஃபியட் , டாட்சன் ஆகிய 7 பன்னாட்டு நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கள் ஆலையை மூடியிருந்ததது இங்கே நினைவுகூரத்தக்கது. இதுகுறித்து சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்திருந்த ராகுல் காந்தி, தன் பதிவில் `9 ஆலைகள் மூடப்பட்டுள்ளதுடன் 649 விநியோகஸ்தர்களின் கடைகள் மூடப்பட்டு 84 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை பிரச்னை குறித்து பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்று’ கேட்டுக்கொண்டிருந்தார்.