கல்வி

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன?

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன?

webteam

இன்று வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காணலாம்.

ப்ளஸ் 2 தேர்வு நடந்தபோது தேர்ச்சி பெற நினைக்கும் மாணவர்களுக்கு எளிதாகவும், அதிக மதிப்பெண் எடுக்க நினைக்கும் மாணவர்களுக்கு கடினமாகவும் இருந்ததாக ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. அதனை உணர்த்தும் விதமாகவே அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் தேர்வு முடிவுகளும் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிக மதிப்பெண் எடுக்க கடினம் என்பதால் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு அவசியப்படும் கட் ஆஃப் நிலை குறைய வாய்ப்புள்ளதாகக் கல்வியாளர்கள் கணிக்கின்றனர்.

500 மதிப்பெண்களுக்கு மேல் எவ்வளவு மாணவர்கள் உள்ளனர், 450லிருந்து 500வரை எவ்வளவு மாணவர்கள் பெற்றுள்ளனர் என ஒவ்வொரு மதிப்பெண் நிலையிலான மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டாண்டுகளாக வெளியிடப்பட்டன. ஆனால், இந்த முறை மதிப்பெண் நிலை குறித்து புள்ளி விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிடவில்லை. இதனால், கட் ஆஃப் நிலை குறித்து முன்கூட்டியே அறியும் வாய்ப்பு குறைந்துந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நீட் தேர்வால் எம்.பி.பி.எஸ், பி.டிஎஸ் படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அவசியமில்லை என்றானாலும், பொறியியல், கால்நடை, சித்த மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட இதர படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியாளர்கள் கணித்தது போன்று மதிப்பெண் நிலை குறைந்திருந்தால், கட் ஆஃப் மதிப்பெண்ணில் நிச்சயம் தாக்கமிருக்கும் என்று கூறப்படுகிறது.