கல்வி

உங்களுக்கான பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி? -வழிகாட்டும் உயர்கல்வி நிபுணர்

உங்களுக்கான பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி? -வழிகாட்டும் உயர்கல்வி நிபுணர்

webteam

பிளஸ் டூ படித்த மாணவர்கள் எந்தப் படிப்பில் சேரலாம் என்று திட்டமிடுகிற காலம். அவர் சொன்னார்… இவர் சொன்னார்… என குழம்புகிற காலமும் இதுதான். நீங்கள் விரும்பும் பாடப்பிரிவை, விரும்பும் கல்லூரியில் படிப்பதற்கான எளிய வழிமுறைகளைத் தருகிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வுகள் மற்றும் மாணவர் சேர்க்கை அமைப்பின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் முனைவர் ப.வே. நவநீதகிருஷ்ணன்…

கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் ஆர்வம் சற்று இறங்கு முகமாகவே இருந்து வந்தது. ஆனாலும் தொழில்கல்வித் துறைகளில் அதன் மதிப்பு உயர்ந்தே இருக்கிறது. தமிழ்நாட்டில் பிஇ, பிடெக் ஒற்றைச்சாளரச் சேர்க்கைக்கு சென்ற ஆண்டைவிட 20 சதவீத விண்ணப்பங்கள் கூடுதலாக வந்துள்ளன. அதற்கு நீட் தேர்வின் நம்பகமற்றத் தன்மை ஒரு காரணமாக இருக்கலாம் என்றாலும், தமிழகத்தில் பொறியியல் புதுப்பொலிவு பெற்றுவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

குழப்பம் வேண்டாம்

இந்த ஆண்டு அதிக அளவில் சில கல்லூரிகளில் ஒருசில பாடப்பிரிவுகள் நீக்கப்படுவதும் நல்லதுதான்.  அண்ணா பல்கலைக் கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள், தன்னாட்சி, சுயநிதி, உதவி பெறும் கல்லூரிகள், தரச்சான்று பெற்ற கல்லூரிகளில், பல்வேறு பாடப்பிரிவுகளில் குழப்பமடையாமல் மாணவர்களும் பெற்றோரும் உரிய கல்லூரியையும் பாடப்பிரிவையும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

எந்தப் பாடப்பிரிவுக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பதுதான் பலருக்குத் தோன்றும் முதல் கேள்வி. இன்றைய நிலையைவிட 4 ஆண்டுகள் கழித்து நிலை எப்படி இருக்கும் என்றுதான் பார்க்கவேண்டும். அதற்கான விடை ‘எல்லாமே என்பதுதான். ஒரு காலத்தில் பசுமையாகத் தோன்றும் பாடப்பிரிவு நான்கு ஆண்டுகளில் வறண்டதாக மாறலாம். (சிவில், மெக்கானிக்கல் பிரிவுகள் எடுத்துக்காட்டுகள்).

ஐடி சார்ந்த படிப்புகள் ஓரளவுக்கு விதிவிலக்கு. ஆனால் திறமை கொண்டவர்களுக்கு எல்லா துறைகளிலும் சிறந்த வாய்ப்புண்டு. எனவே ஆப்டியூட் என்று சொல்லப்படும் உங்கள் மனவேட்கைக்கு மதிப்பளித்துப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.

பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க ஒரு முறை
மாணவர்கள் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க அறிவுபூர்வமான, திடமான ஒரு முறையை நான் சொல்வதுண்டு. எல்லாப் பாடப்பிரிவுகளையும் ஏழு தொகுதிகளாகப் பின்வருமாறு பிரிக்கலாம்.

உயிரியல் சார்ந்தவை: பயோடெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோடெக்., பயோமெடிகல் என்ஜினீயரிங், பயோஇன்ஃபர்மேடிக்ஸ், பயோமெடிகல் இன்ஸ்ட்ருமென்டேஷன் (மொத்தம் 5)

வேதியியல்: கெமிக்கல் என்ஜினீயரிங் / டெக்னாலஜி, பாலிமர் டெக், பிளாஸ்டிக்/ரப்பர் டெக்., கெமிக்கல் மற்றும் எலக்ட்ரோகெமிக்கல் என்ஜினீயரிங், தோல் தொழில்நுட்பம் (18)

பொதுப்பொறியியல்: சிவில் இன்ஜினீயரிங், ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ், என்விரான்மெண்டல் இன்ஜினீயரிங், நேவல் ஆர்க்கிடெக்சர் (9)

கணினிவியல்: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங், தகவல்தொழில்நுட்ப வியல், கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பவியலும் மேலாண்மையும் (8)

(முனைவர் ப. வே. நவநீதிகிருஷ்ணன்)

மின்னியல்: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல் இன்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் - பவர் (5)

மின்னணுவியல்: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், எலக்ட்ரானிக் மற்றும் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் (3)

எந்திரவியல்: மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் , ஆட்டோமோபைல் இன்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் (12)
மொத்தம்: (60)

இந்த ஏழு தொகுப்புகளில் உங்களுக்கு விருப்பம் உள்ள தொகுப்புகளை முதலில் தேர்ந்தெடுங்கள். பிறகு அவற்றுக்குள் அடங்கும் பாடப்பிரிவுகளில் கவனம் செலுத்தி, ஒன்றையோ சிலவற்றையோ தேர்ந்தெடுத்துக்கொள்வது எளிதான முறை.

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள்
இந்தப் பாடப்பிரிவுகள் தவிர, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களாக அறியப்படும் AI, Machine Learning, Internet of Things, Block Chain, Quantum Computing, Data Sciences, Robotics, Cyber Security, 3D printing/Design முதலியவற்றில் சில படிப்புகள் மட்டும் ஒருசில கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் வழங்கப்படலாம். இவற்றுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதால், விருப்பம் இருந்தால் அதைத் தேர்ந்தெடுக்கலாம்.

எந்தக் கல்லூரி?
இனி, விரும்பிய பாடப்பிரிவுகளை எந்தக் கல்லூரியில் தேடலாம் என்பது கேள்வி. அதற்கு நான் ஒரு தரவரிசை முறையைச் சொல்வதுண்டு. தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவை வழங்கப்படும் கல்லூரிகளில் உங்களுக்கு ஏற்றவற்றைப் பட்டியலிடுங்கள்.

நேரில் சென்றோ, நண்பர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், வலைத்தளங்கள் மூலமாகவோ, அவை ஒவ்வொன்றுக்கும் பின்வரும் தகுதிகள் எந்த அளவுக்கு உள்ளன என அளவிட்டு, அதற்கேற்ப மதிப்பெண்களை வழங்குங்கள். ஒவ்வொரு கல்லூரிக்கும் மொத்த மதிப்பெண்களைக் கணக்கிட்டு, அவற்றின் அடிப்படையில் அந்தக் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை உருவாக்குங்கள். கலந்தாய்வின்போது உங்கள் தரவரிசைப் பட்டியலின்படி, உங்களுக்குப் பிடித்த கல்லூரிகளில் மட்டுமே கவனம் செலுத்தலாம். மேலும், தேவையான பாடப்பிரிவையும் எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம்.

கல்லூரியின் தகுதிகள் பின்வருமாறு...
1. அடிப்படை வசதிகள் (அதிகபட்ச மதிப்பெண்: 16);
2. கற்பித்தலின் தரம் (16);
3. பல்கலைக்கழகம் வழங்கிய தரச்சான்று (12);
4. பிற கல்லூரிகளுடன் ஒப்பீடு (12);
5. தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி வாய்ப்பு (8);
6. வேலைவாய்ப்பு (8);
7. முன்னாள் மாணவர் கருத்து (8);
8. பணிக்கூடப் பயிற்சி மற்றும் bridge courses (8);
9. நிர்வாகத்தினரின் ஈடுபாடும் பிறமொழி கற்க வாயப்பும் (6)
10. ராகிங் தடுப்பு (6).

பின்வரும் பாடப்பிரிவுகள் பலருக்குத் தெரியாமல்போக வாய்ப்புண்டு.
Agriculture & Irrigation Engg.,
Ceramic Tech.,
Food Tech.,
Robotics & Plastic Tech.,
Pharmaceutical Tech.,
Chemical & Petrochemical Engg.,
Petroleum Refining Tech.,
Material Sc.,
Textile Design Tech.,
Fashion aTech.

தமிழ்வழி பொறியியல்
பொறியியலை தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு 20 சதவீதப் பணி ஒதுக்கீடு உண்டு. தமிழ்வழிக்கல்வி, சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் கிண்டி பொறியியல் கல்லூரியிலும், திருச்சி மற்றும் தூத்துக்குடியிலுள்ள பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும் வழங்கப்படுகின்றன. விழுப்புரம் கல்லூரியில் மெக்கானிக்கல் மட்டும் உண்டு.

பொறியியல் என்பதே புத்திசாலித்தனம் என்று பொருள்படும் ‘ingenium’ என்ற சொல்லில் இருந்துதான் தோன்றியது. இந்தியன் ஸ்டாஃப் ஃபெடரேஷன் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டுக்குள் உங்களுக்கு நம் நாட்டிலேயே 3 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்கிறார்கள். எதிர்கால பொறியியல் நிபுணர்களுக்கு நல்வாழ்த்துகள்.