கல்வி

”ஜனவரி 20-க்குப் பின் செமஸ்டர் நடத்தப்படும்” - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

”ஜனவரி 20-க்குப் பின் செமஸ்டர் நடத்தப்படும்” - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

நிவேதா ஜெகராஜா

ஆன்லைன் தேர்வு குறித்து மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தற்போது செய்தியாளர்களை சந்தித்து அதுகுறித்து பேசியுள்ளார்.

அப்போது பேசுகையில், “11 அமைப்புகளுடன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தேர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் பலரும் ‘ஆன்லைன் தேர்வு வேண்டாம் - ஆப்லைனில் தேர்வு நடத்தும்பட்சத்தில் கால அவகாசம் வேண்டும்’ என கேட்டுள்ளனர். இந்த கால அவகாசத்தில், அதிகபட்சமாக 1 மாதம் கேட்கப்பட்டது. கால அவகாசம் கூடுதலாக அளித்து, அந்த கோரிக்கையை ஏற்கிறோம். அதன்படி, நவம்பரிலிருந்து 2 மாதம் அவகாசம் தரப்படுகிறது. இதன்படி, ஜனவரி 20ம் தேதிக்குப் பின் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும்” என்றார் அமைச்சர் பொன்முடி.

முன்னதாக கல்லூரிகள் வழக்கம்போல செயல்பட துவங்கியதை அடுத்து, தேர்வுகள் ஆன்லைன் இல்லாமல் வழக்கம்போல ஆஃப்லைனில் கல்லூரி வளாகத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ‘ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும்’ என வலியுறுத்தி ஈரோடு, மதுரை என பல இடங்களில் மாணவர்கள் பலர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.